/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை வரத்து குறைவு தேங்காய் எண்ணெய் விலை உயர்வு
/
கொப்பரை வரத்து குறைவு தேங்காய் எண்ணெய் விலை உயர்வு
கொப்பரை வரத்து குறைவு தேங்காய் எண்ணெய் விலை உயர்வு
கொப்பரை வரத்து குறைவு தேங்காய் எண்ணெய் விலை உயர்வு
ADDED : மே 24, 2025 11:39 PM
கோவை: கொப்பரை வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதால், தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
சமையலுக்கு மிக அத்தியாவசிய பொருளாக எண்ணெய் உள்ளது. குறிப்பாக, பாமாயில் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இவ்விரு எண்ணெய்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தேங்காய் எண்ணெயை பொறுத்தவரையில், தமிழ்நாடு, கேரள மாநிலங்களே கொப்பரை அதிகம் உற்பத்தி செய்வதால், விலை நிர்ணயம் இங்குதான் செய்யப்படுகிறது.
கடந்த, டிச., மாதம் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனால், தற்போது பிற எண்ணெய் விலை குறைந்துள்ள போதும், தேங்காய் எண்ணெய் விலை குறையவில்லை.
தென்னை மரங்களில் வெள்ளை பூச்சி தாக்குதல், வாடல் நோய் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்து, கொப்பரையின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் இருதயராஜா கூறியதாவது:
விலை அதிகரித்து இருந்த பாமாயில், ஒரு லிட்டர் 30 ரூபாய் விலை குறைந்து 120 ரூபாய்க்கும், சூரிய காந்தி எண்ணெய் 150-160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
450 ரூபாய் வரை சென்ற நல்லெண்ணெய் விலை, எள் வரத்து அதிகரித்ததால், 100 விலை குறைந்து, 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை எண்ணெய் 220 ரூபாய்க்கு எவ்வித மாற்றங்களும் இன்றி, விற்பனை செய்யப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் 250 ரூபாயாக இருந்தது; தற்போது, சில்லரை கடைகளில் 350 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கொப்பரை வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களில் வரத்து அதிகரித்து விலை குறையும் என எதிர்பார்க்கின்றோம்.