/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்தது மீன் விலை; வாடிக்கையாளர்கள் குஷி
/
குறைந்தது மீன் விலை; வாடிக்கையாளர்கள் குஷி
ADDED : செப் 23, 2024 12:15 AM
கோவை : புரட்டாசி மாதம் காரணமாக விலை குறைந்ததால், ஏராளமானோர் மீன் வாங்க உக்கடம் மார்க்கெட்டில் திரண்டனர்.
புரட்டாசி மாதம் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பக்தர்கள் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவு உண்பது கிடையாது. இதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில், மீன் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் புரட்டாசி மாதம் என்பதாலும், வரத்து அதிகம் இருந்ததாலும், விலை குறைந்திருந்தது. புரட்டாசி நோன்பு கடைபிடிக்காதவர்கள், பிற மதத்தினர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குறைந்த விலைக்கு மீன் வாங்கிச் சென்றனர்.
கோவை மாவட்ட மீன் விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் காதர் கூறுகையில், ''வழக்கமாக புரட்டாசி மாதத்தில், மீன்கள் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். தற்போது மீன்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அனைத்து மீன்களின் விலையும் குறைந்துள்ளது. மீன்வரத்து அதிகளவில் இருக்கும் வரை, விலை குறைவாகவே இருக்கும்,'' என்றார்.