/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயலி மூலமாக பணம் பெற்று மோசடி; கலெக்டரிடம் மதுக்கரை மக்கள் புகார்
/
செயலி மூலமாக பணம் பெற்று மோசடி; கலெக்டரிடம் மதுக்கரை மக்கள் புகார்
செயலி மூலமாக பணம் பெற்று மோசடி; கலெக்டரிடம் மதுக்கரை மக்கள் புகார்
செயலி மூலமாக பணம் பெற்று மோசடி; கலெக்டரிடம் மதுக்கரை மக்கள் புகார்
ADDED : செப் 15, 2025 11:13 PM
கோவை; பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், தொண்டாமுத்துார் பாக்கியலட்சுமி, 82 கொடுத்த மனுவில், 'எனது சம்பாத்தியத்தில் வாங்கிய தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் என, பல கோடி ரூபாய் சொத்து என் மகன் பெயரில் உள்ளது. ஏராளமாய் வருவாய் ஈட்டுகிறார். பல நுாறு பேருக்கு வேலை கொடுக்கிறார்.
எனக்கு உணவு தருவதில்லை; வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். எங்கே செல்வது என தெரியாமல் தவிக்கிறேன். தொண்டாமுத்துார் போலீசார் புகார் மனுவை ஏற்கவில்லை. என் வீட்டில் தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
வேடப்பட்டி கார்டன் சிட்டி குடியிருப்பு பகுதி மக்கள் கொடுத்த புகார்: எங்கள் அபார்ட்மென்ட் பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுகின்றன.
இரவு நேரத்தில் செல்வோரை துரத்திக் கடிக்கின்றன. மக்கள் சிரமப்படுகின்றனர். நாய்களை பிடித்து வேறு பகுதிக்கு அப்புறப்படுத்த வேண்டும்.
கணபதியை அடுத்த எப்.சி.ஐ., குடோன் இந்திரா நகர் மக்கள் கொடுத்த மனு: எங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாயில் கழிவு தேங்கி நிற்கிறது. கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் சாலையில் நிரம்பி தேங்கி நிற்கிறது. அவ்வழியே சாலை போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கழிவு நீரை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.
மதுக்கரை மக்கள் கொடுத்த மனு: திருப்பூரை சேர்ந்த மருதாசலமூர்த்தி உள்ளிட்ட 5 பேர், குறிப்பிட்ட செயலி வாயிலாக பணம் செலுத்தினால், மாதந்தோறும் 1,000 ரூபாய் கிடைக்கும் என்றனர். மாதந்தோறும் பணம் செலுத்தினோம். மாதந்தோறும் 1,000 ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்தது. அதை பார்த்து பலரும் தொகையை செயலியில் டெபாசிட் செய்தனர். ஒரு கட்டத்தில் பணம் கிடைக்கவில்லை. சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது, 5 பேரும் மோசடி பேர்வழிகள் என்பது தெரியவந்தது. சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளோம். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.