UPDATED : அக் 08, 2026 09:58 PM
ADDED : அக் 08, 2026 07:47 PM

பெ.நா.பாளையம்: நாயக்கன்பாளையத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் கீழ், மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சுகந்தி, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையில் ரகங்கள் தேர்வு, மண் பரிசோதனை, நீர் பாசனம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட தொழில் நுட்பங்களை எடுத்து கூறினார். மேலும், படைப்புழு கட்டுப்பாட்டில் இனக் கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறி, வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தெளித்தல் மற்றும் உயிரியல் கட்டுப்பாடு முறைகள் குறித்தும், சொட்டுநீர் பாசனத்தில் நீரில் கரையும் உரம், களை மேலாண்மை மற்றும் அறுவடைக்கு பிந்தைய மதிப்பு கூட்டல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கினார்.
வேளாண் அலுவலர் ஈஸ்வரி, உதவி நுட்ப மேலாளர்கள் தினகரன், மகேந்திரன், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி, விவசாயிகள் பங்கேற்றனர்.
