கால்நடைகளிடம் ரத்த, சளி மாதிரி சேகரிப்பு: பருவமழை முன்னெச்சரிக்கை
கால்நடைகளிடம் ரத்த, சளி மாதிரி சேகரிப்பு: பருவமழை முன்னெச்சரிக்கை
UPDATED : அக் 08, 2026 09:57 PM
ADDED : அக் 08, 2026 07:58 PM

-மேட்டுப்பாளையம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பை அறிய, ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில், 2 லட்சத்து 63 ஆயிரத்து 88 கறவை மாடுகள், 2 லட்சத்து 98 ஆயிரத்து 500 ஆடுகள், பல லட்சம் கோழிகள் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளை பாதுகாக்க, வட்டாரம் வாரியாக அவசர குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர் தலைமையிலான இக்குழு, மழையின் போது கால்நடைகள் பாதிக்கப்படும் இடங்களுக்கு நேரடியாக சென்று தேவைப்படும் சிகிச்சைகள், உதவிகளை செய்யும். கால்நடை ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்புலன்ஸில் தலா ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர் இருப்பர்.
கோவை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் சித்ரா கூறியதாவது:
விவசாயிகள் வானிலை முன்னறிவிப்புகளை கவனமாக தெரிந்து கொள்ள வேண்டும். கால்நடை கொட்டகைகளின் உறுதியை சரிபார்க்க வேண்டும். கொட்டகைகளை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருக்கவும். குடிநீர் தொட்டிகளை சுத்தமாக பராமரித்து, எல்லா நேரங்களிலும் சுத்தமான மற்றும் புதிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தீவனம் போதுமான அளவு கிடைப்பதை உறுதிசெய்யவும். கால்நடைகளுக்கு சமச்சீர் ஊட்டச்சத்தை வழங்க வேண்டும். சினை கால்நடைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்.
மன அழுத்தம் மற்றும் நோய் பரவலைத் தடுக்க, கொட்டகைகளில் கால்நடைகளை கூட்டமாக அடைப்பதைத் தவிர்க்கவும். தீவனத்தைத் தேடி கால்நடைகள் நீண்ட துாரம் நடப்பதைத் தவிர்க்கவும். கனமழை அல்லது வெள்ளத்தின் போது கால்நடைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
காலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. ஈரமான இடங்களில் மேய்ச்சலுக்கு சென்றால் செடியுடன் சேர்ந்து வேர் பகுதியில் உள்ள மண்ணையும் சாப்பிடும் நிலை வரும். இதனால், வயிற்றுப்போக்கு வர வாய்ப்புள்ளது. காய்ந்த நிலங்களில் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். கால்நடைகளை மின் கம்பங்களில் அல்லது மின் சாதனங்களுக்கு அருகில் கட்டி வைக்கக்கூடாது.
தொற்று நோய் பாதிப்புகளைக் கண்டறியவும், தவிர்க்கவும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு சார்பில், கால்நடைகளுக்கு ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களிலும் பருவமழைக் காலத்தில் உடனடி சிகிச்சை அளிக்கத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவப் பயன்பாட்டுப் பொருட்கள், கனிமக் கலவைகள், ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.--
