/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
/
தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
ADDED : செப் 27, 2024 11:00 PM
பெ.நா.பாளையம்: பருவமழை காலம் தொடங்க உள்ளதால், நோய் மற்றும் தொற்று பரவலை தடுக்க, வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும் என, பேரூராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் அனைத்து நீர் நிலைகளிலும் கரைகளை பலப்படுத்தி, மழை நீர் வடிகால் சீரமைத்து, தயார் நிலையில் இருக்க வேண்டும் என, ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
மேலும், பேரூராட்சிகளுக்கு வழங்கியுள்ள அறிவுரையில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை வாயிலாக பழுதடைந்த கட்டடங்களை கண்டறிந்து, அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலை துறையின் வாயிலாக மரங்கள் அப்புற படுத்துவதற்கான உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ரோட்டில் பாலங்கள் சேதமடைதல் மற்றும் மரங்கள் சாய்ந்தால் அகற்றும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மழைக்காலங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்காது பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு உரிய பணிகளை மேற்கொள்ள பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து உள்ள இடங்களில் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறையின் வாயிலாக, கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்புத் துறையின் வாயிலாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என, அறிவுரைகள் வழங்கப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் கூறுகையில், ''பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மணல் மூட்டைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, தரைமட்ட தொட்டி, மேல்நிலை குடிநீர் தொட்டிகள் குளோரினேஷன் செய்யப்படுகின்றன. டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் தினசரி நடந்து வருகின்றன,'' என்றார்.