ADDED : ஏப் 16, 2026 09:08 PM
அன்னூர்: விநாயகர் சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நல்லி செட்டிபாளையம், துவக்கப் பள்ளி அருகே, அரச மரத்தின் அடியில், உள்ள மேடையில் விநாயகர் மற்றும் நாகர் சிலை உள்ளது. நேற்று அதிகாலையில் பார்த்தபோது விநாயகர் சிலை தள்ளிவிடப்பட்டிருந்தது. சிலையின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவர் அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் அறிந்து, அங்கு பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார், அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் ஜெயபால் உள்பட திரளான பா.ஜ.,வினர் திரண்டனர்.
விநாயகர் சிலையை சேதப்படுத்திய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவர் போதையில் விநாயகர் சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
