ADDED : ஜூன் 06, 2025 06:06 AM
கோவை; கோவையில் இருசக்கர வாகனத்தில் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த உத்தர பிரதேச வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை, செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அழகுராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு மற்றும் தனிப்படை போலீசார் ராஜபாண்டி, ஜெஸ்வின் ஆகியோர், தெலுங்குபாளையம் - வேடப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, சந்தேகப்பட்டு சோதனை செய்தனர். அவர், உத்தரப்பிரதேசம் அலகாபாத் சத்ரா உபர்தார் சிரசா என்ற கிராமத்தைச் சேர்ந்த பைஜானத் மகன் அமன்சிங் என்பது தெரிந்தது. அவரிடம் இருந்த சாக்கு பையில், 21 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் 26 ஆயிரம் ரூபாய், இரண்டு டிஜிட்டல் எடை மெஷின் இருந்தன. இவற்றுடன், கஞ்சா கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர். அவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.