/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.சி.ஐ.டி., போலீசில் மனோஜ் சாமி ஆஜர்
/
சி.பி.சி.ஐ.டி., போலீசில் மனோஜ் சாமி ஆஜர்
ADDED : பிப் 16, 2024 02:13 AM
கோவை;கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மனோஜ்சாமி ஆஜரானார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுவிசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக, 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவலின் படி பலருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், குஜராத் தடயவியல் குழுவினர் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகி இருந்த மொபைல் போன் மற்றும் தொலை பேசி டவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கொலை, கொள்ளை வழக்கின் ஒன்பதாவது குற்றவாளியாக கருதப்படும் மனோஜ்சாமியை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
நேற்று காலை கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் மனோஜ்சாமி ஆஜரானார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை மேற்கொண்டார். ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது மனோஜ்சாமியிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.