/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலக்கடலையை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துங்க! 'அட்மா' முகாமில் விவசாயிகளுக்கு அறிவுரை
/
நிலக்கடலையை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துங்க! 'அட்மா' முகாமில் விவசாயிகளுக்கு அறிவுரை
நிலக்கடலையை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துங்க! 'அட்மா' முகாமில் விவசாயிகளுக்கு அறிவுரை
நிலக்கடலையை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துங்க! 'அட்மா' முகாமில் விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : செப் 20, 2024 10:05 PM

ஆனைமலை : ஆனைமலை அருகே, 'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
ஆனைமலை, பெரியபோது ஊராட்சி அலுவலகம் அருகே, 'அட்மா' திட்டத்தில், எண்ணெய் வித்து பயிர்கள் பதப்படுத்துதல், அறுவடை பிந்தைய தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல், வாய்ப்புகள் பயன்படுத்துதல் குறித்து பயிற்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் தலைமை வகித்து பேசியதாவது:
நிலக்கடலை, எள் போன்ற பயிர்கள் அன்றாட உணவு எண்ணெய் தேவையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை இந்தாண்டு வைகாசி பட்டத்தில், 600 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, 105 முதல், 110 வயதுடைய நிலக்கடலை அறுவடை பணி துவங்கியுள்ளது.
செடியில் இருந்து அறுவடை செய்யும் காய்களை, மண்ணில்லாமல் பிரித்தெடுத்து நிழலில் உலர வைத்து, 8 சதவீத ஈரப்பத நிலையில் சேமித்து வைத்து, சந்தையில் விலை உயரும் போது, ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாகவும், அடுத்த விதைப்பு பருவத்தில் விதைக்கடலைக்காகவும் விற்பனை செய்யலாம்.தற்போது, பண்ணை கொள்முதல் விலை கிலோ, 50 ரூபாய் முதல், 90 ரூபாய் வரை ஈரப்பத நிலையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
பறித்த செடிகளை மேல்புறம் நெகிழி தாள்களால் மூடியும், தரையில் மரச்சட்டங்கள் மேல் சீராக அடுக்கியும், மழைநீரால் அழுகிடாமல் காற்றோத்துடன் அடுக்கி பாதுகாக்கலாம். இவற்றை மாடு, ஆடு ஆகிய கால்நடைகளுக்கு புரதச்சத்து மிக்க உலர் தீவனமாக வழங்கலாம்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சிறு, குறு மானவாரி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, நிலக்கடலையை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் உதவி இயக்குனர் (ஓய்வு) மகாலிங்கம் பேசுகையில், ''காலத்தே பெய்யும் மழையின் ஈரத்தை பயன்படுத்தி, விளைச்சல் தரும் பயிர்களான துவரை, நரிப்பயறு, கொள்ளு மற்றும் எள் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும்.
எந்த நோய், பூச்சி பாதிப்பும் இல்லாத சீராக காய்க்கும் மரங்களுக்கு, தொடர்ந்து வேர்களில் பூச்சிக்கொல்லி கட்டும் முறையை தடுத்து நிறுத்த வேண்டும்.ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால், மண்புழுக்கள், நுண்ணுயிரிகள் பாதித்து, மண் மலடாகும்,'' என்றார்.
உதவி விதை அலுவலர் மாடசாமி, உதவி வேளாண் அலுவலர் அம்சத், திட்ட உதவி மேலாளர் பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.