ADDED : பிப் 20, 2024 10:29 PM
இந்த 21ம் நூற்றாண்டில், நவீன தொழில்நுட்பங்களுக்கு இன்றைய இளம் தலைமுறையினர் பழகிவிட்ட நிலையில், தற்காப்பு கலைகளில் இந்தியர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் மற்றும் அவர்களின் உளவியல் மற்றும் உடல் நலனை மேம்படுத்தும் கலை ஆகியவற்றை அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு.
எனினும், குழந்தைகளிடையே தற்காப்பு கலைகள் கற்க ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெற்றோர் மத்தியில் அதிகரித்திருக்கும் அச்ச உணர்வும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பல்வேறு சமூக அமைப்பினர் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, குழந்தைகள் வன்கொடுமை, கடத்தல், வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில், அச்சூழல்களை எதிர்கொள்ள தெரியாத குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியா, தற்காப்பு கலைகளுக்கு பெயர் போன நாடு என்று கூறலாம். கை, கால், புத்தி ஆகியவற்றை பயன்படுத்தும் தற்காப்பு கலைகளும், ஆயுதங்களை பயன்படுத்தும் தற்காப்பு கலைகளும் உள்ளன.
இந்தியாவின் பிரபலமான தற்காப்பு கலைகள்:
வர்மக்கலை
வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக்கலை என்பது முழுக்க முழுக்க தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்த கலையே.
அடிமுறை
சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, களரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமே நாட்டு அடிமுறை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் மார்த்தாண்டவர்மனின் தளபதி அனந்த பத்மநாபன் இந்த தற்காப்புக் கலையை பிரபலப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்த கலையில் எதிராளியை கையாலும் காலாலும் தாக்கி வீழ்த்துவர். ஆயுதம் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, அடிமுறை உதவும். அடிமுறை என்பது தமிழ்நாட்டுத் தற்காப்புக் கலை- விளையாட்டுகளில் ஒன்று.
களரிபயட்டு
இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றான களரிப்பயட்டு. கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் தோன்றி தற்போது தென்னிந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. மலையாளத்தில், களரி என்ற சொல் ஒரு குறிப்பிட்ட வகை பள்ளி, உடற்பயிற்சி கூடம் அல்லது தற்காப்புக் கலைகள் பயிற்சி என்பதைக் குறிக்கிறது. இதில் போலி போர் (ஆயுத மற்றும் நிராயுதபாணி போர்) அடங்கும். இப்பயிற்சியை குழந்தைகளும், பெண்களும் ஆர்வத்துடன் கற்கின்றனர்.
சிலம்பம்
சிலம்பம் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த தற்காப்புக் கலையாகும். ஒரு கம்போ அல்லது இரண்டு கம்புகளைப் பயன்படுத்தியோ சண்டை இடுவர். தற்போது இந்த சிலம்பப் பயிற்சி பெரும்பாலான பள்ளிகளில் கற்றுத் தரப்படுகிறது. இக்கலையில் விலங்குகளின் அசைவுகள், வேகம் மற்றும் துல்லியம் என பல்வேறு கட்ட பயிற்சிகளை உள்ளடக்கியது. இதில் குட்டு வரிசை என்பது சிலம்பத்தின் ஒரு அங்கமாகும். இதில் நிராயுதபாணி சண்டைப் பயிற்சி கற்பிக்கப்படுகிறது.
தங்கள் குழந்தைகள் வெளிநாட்டு தற்காப்புக்கலையில் சிறந்து விளங்க வேண்டும் என ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் இந்திய தற்காப்புக் கலைகளின் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கலாம். இதன் மூலமே அடுத்த தலைமுறையினருக்கு நம் நாட்டுக் கலைகளின் பெருமைகளை எடுத்துச் செல்ல முடியும்.
