/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் இன்று மயான பூஜை
/
மாசாணியம்மன் கோவிலில் இன்று மயான பூஜை
ADDED : பிப் 10, 2025 10:46 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று மயான பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொங்கு நாட்டு மக்களின் காவல் தெய்வமாக விளங்கும், ஆனைமலை மாசாணியம்மன் உப்பாற்றங்கரையில், சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தை மாதம் வரும் அமாவாசையில் கொடியேற்றப்படுகிறது. கொடியேற்றிய, 14ம் நாள் இரவு ஊர்வலமாக மயான கரைக்கு சென்று மயான மண்ணினால், அம்மனின் உருவச்சிலை செய்து, அதற்கு சக்தி பூஜை செய்யப்படுவது வழக்கம்.
இந்தாண்டு குண்டம் திருவிழா கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இன்று நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் மயான பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக, பக்தர்கள் அமரும் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க தடுப்பு கம்புகள் நடப்படுகின்றன. போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தடுப்பு அமைத்தல், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும், 14ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.