/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் நலம் பாதித்த ஆண் யானைக்கு மருத்துவ சிகிச்சை
/
உடல் நலம் பாதித்த ஆண் யானைக்கு மருத்துவ சிகிச்சை
ADDED : ஏப் 23, 2025 11:01 PM

மேட்டுப்பாளையம், ; சிறுமுகை வனப்பகுதியில் உடல் மெலிந்த நிலையில் உள்ள, ஆண் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுமுகை வனப்பகுதியில் மூலையூரில் இருந்து அம்மன்புதூர் வரை, வனப் பகுதியில் ஒரு ஆண் யானை, உடல் மெலிந்த நிலையில் சுற்றி வந்தது. ஒரே இடத்தில் இந்த யானை, பல மணி நேரம் நின்றிருந்தது.
விவசாயிகள் வாழை இலை மற்றும் தண்டுகளை யானைகளுக்கு உணவாக அளித்தும், தண்ணீரை யானை மீது பீய்ச்சி அடித்தனர். தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர், யானையை கண்காணித்து மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
நேற்று வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார், கோவை உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் ஆகியோர் யானையின் நடமாட்டத்தை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது யானைக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அந்த மருந்து, மாத்திரைகளை ஆண் யானை எடுத்து சாப்பிட்டதை பார்த்துள்ளனர். மேலும் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணிகளில், சிறுமுகை வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறியதாவது:
டாக்டர் சுகுமாரின் பரிந்துரையின் பேரில், உடல் நலம் பாதித்த யானைக்கு, தர்ப்பூசணி, வாழைப்பழம் வாயிலாக, ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள், குடற்புழு நீக்கம் மாத்திரைகளை பழங்களில் வைத்து யானைக்கு வழங்கினோம். சாப்பாட்டில் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக்கை ஊற்றி, நன்கு பிசைந்து, உருண்டை பிடித்து, வாழை இலையில் வைத்து யானைக்கு வழங்கினோம்.
உணவு பொருட்களை நன்கு மென்று சாப்பிடுகிறதா என, தெரிந்து கொள்ள, கரும்பை போட்டோம். யானை கரும்பை நன்கு மென்று சாப்பிட்டது.
தொடர்ந்து யானையை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

