/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை மேட்டில் மருத்துவ கழிவுகள்: சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
/
குப்பை மேட்டில் மருத்துவ கழிவுகள்: சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
குப்பை மேட்டில் மருத்துவ கழிவுகள்: சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
குப்பை மேட்டில் மருத்துவ கழிவுகள்: சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
ADDED : பிப் 12, 2024 11:01 PM

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சி குப்பைமேட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால், நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம், அசோகபுரம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள குப்பைமேடுகளில் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால், நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், விவசாய கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் நிகழ்வாகி வருகிறது.
இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள், குப்பைகள் குவிக்கும் இடத்தில், சிறிய மற்றும் பெரிய அளவில் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.
துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சி அம்மன்ஸ் நகர் அருகே உள்ள குப்பைமேட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன.
மருத்துவ கழிவுகள் கழிவுநீரோடு கலக்கும் போதும், அவற்றை எரிக்கும் போதும், ஆபத்தான கதிரியக்க துகள்களை உமிழ்கிறது. மருத்துவ கழிவுகளை எரிக்கும் போது ஏற்படும் காற்று மாசு, மனிதர்களுக்கு சுவாச பிரச்சனையை ஏற்படுத்தி, நுரையீரலை பாதிக்கிறது. காக்கை, குருவி உள்ளிட்ட பறக்கும் உயிரினங்களை பாதிப்பதுடன், காற்றில் உள்ள துகள்களை மாசுபடுத்தும் தன்மையையும், அந்த கழிவுகள் ஏற்படுத்துகின்றன. மருத்துவ கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைகிறது. நீரோடைகள், ஆறுகள், கால்வாய்கள், நீர்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகளுக்கு மட்டுமல்லாது விவசாய நீர் பாசன அமைப்புகளுக்கும் இது சேதத்தை ஏற்படுத்துகிறது.
அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் குப்பைகளோடு குப்பைகளாக மருத்துவ கழிவுகள் வீசி எறியப்படுகின்றன. இதனால் எச்.ஐ.வி., மஞ்சகாமாலை மற்றும் பிற வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதே போல ஒட்டுண்ணி தொற்றுகள், காசநோய், ஆஸ்துமா, நுரையீரல் தொற்றுகள், தோல் தொற்றுகள், காலரா போன்றவையும் ஏற்படலாம். இப்பிரச்னைக்கு ஆரம்ப காலத்திலேயே மருத்துவ கழிவுகளை கொட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, அசோக புரம் ஊராட்சி தலைவர் ரமேஷ் கூறுகையில், ''அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எந்த இடத்திலும் மருத்துவ கழிவுகள் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொட்டும் நபர்கள் மீது போலீசில் புகார் செய்து, குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.