ADDED : மார் 25, 2026 08:29 PM

அன்னுார்: அன்னுாரில், பல்வேறு சமுதாய தலைவர்களை, பா.ஜ., மேலிட பிரதிநிதி சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், அவிநாசி தனி தொகுதி பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவிநாசி தொகுதிக்கு பா.ஜ., மேலிட பார்வையாளராக, மகளிரணி சமூக ஊடகப்பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதிமா சுபாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அவிநாசி தொகுதியில் பல்வேறு சமுதாயப் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டு ஆதரவு திரட்டும் பணியை துவக்கியுள்ளார்.
நேற்று, அன்னுாரில், ஓதிமலை சாலையில் ஒரு தோட்டத்து வீட்டில் பல்வேறு சமுதாய பிரதிநிதிகளை சந்தித்து பேசகையில், ''அனைவருக்கும் வங்கி கணக்கு, சிறு தொழில் முனைவோருக்கு கடன், ஓய்வூதிய திட்டம், மிகக்குறைந்த கட்டணத்தில் விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, பல ஆயிரம் கி.மீ., க்கு புதிதாக தேசிய நெடுஞ்சாலை என, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, துாய்மையான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. உங்களது கோரிக்கைகளை கூறினால், கட்சி தலைமையிடம் தெரிவித்து மத்திய அரசு வாயிலாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
சமுதாய பிரதிநிதிகள் பேசுகையில், 'அவிநாசி தொகுதியில் விடுபட்ட 1,400 குளங்கள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு 2ம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை, தோட்டத்தில் விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும். பராமரிப்பு இல்லாத கோவில்கள் சீரமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்' என்றனர்.
பா.ஜ., வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் சிவக்குமார், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், ஒன்றிய தலைவர் ஆனந்தன், பொதுச்செயலாளர்கள் மூர்த்தி, தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
