/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்!
/
மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்!
மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்!
மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்!
ADDED : பிப் 03, 2025 11:47 PM

போக்குவரத்து நெரிசல்
வால்பாறை போஸ்ட் ஆபீஸ் அருகே, ரோட்டில் அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தாதவாறு, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- விக்ரம், வால்பாறை.
மின்விபத்து அபாயம்
கிணத்துக்கடவு, அண்ணா நகர், முதல் தெருவில் மின் கம்பத்தில் உள்ள மீட்டர் பெட்டி கூண்டு சேதம் அடைந்துள்ளது. மேலும், இந்த பெட்டி தாழ்வாக இருப்பதால், அதிக அளவு விபத்து அபாயம் உள்ளது. எனவே, மின் துறை அதிகாரிகள் இதை கவனித்து உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- மது, கிணத்துக்கடவு.
ரோட்டில் மண் குவியல்
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் ஒரு பகுதியில் மண் குவிந்து காணப்படுகிறது. இதனால் பைக் ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். சில நேரங்களில் இவ்வழியில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டோரத்தில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
-- கிஷோர், கிணத்துக்கடவு.
ரோடு சேதம்
சென்றாம்பாளையத்தில் இருந்து சூலக்கல் செல்லும் ரோட்டில், வளைவு பகுதி அருகே ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- பிரகாஷ், ஆச்சிபட்டி.
மின்விளக்கு இல்லை
பொள்ளாச்சி, நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே இரவு நேரத்தில் ரோட்டில் வாகனத்தில் செல்லும் போது போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால், ரோட்டை கடக்கும் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இங்கு மின் விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ரஞ்சித், பொள்ளாச்சி.
பராமரிப்பில்லாத ரிசர்வ் சைட்கள்
உடுமலை, நேருவீதி எக்ஸ்டன்சன் ரோட்டில் ரிசர்வ் சைட்கள் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளன. இதனால் செடிகள் புதர் காடாக வளர்ந்துள்ளது. விஷப்பூச்சிகள் அவ்விடத்தில் தஞ்சமடைவதுடன் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் செல்கின்றன. இதனால் அப்பகுதியினருக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது. மேலும், குப்பைக்கழிவுகளும் தொடர்ந்து அவ்விடத்தில் கொட்டப்படுவதால், மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.
- மாரிமுத்து,உடுமலை.
சீரமைக்காத பூங்கா
உடுமலை நகராட்சி ஸ்ரீ நகர் பூங்கா பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. பூங்காவில் குப்பை நிறைந்துள்ளது. இப்பூங்காவை சீரமைத்து பராமரிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவக்குமார், உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, பழைய அக்ரஹார வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. திறந்த வெளியில் வீசப்படுவதால், தெருநாய்கள் அவற்றை இழுத்து வந்து ரோடு முழுவதும் பரப்பி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
- ரஞ்சித், உடுமலை.
சேதமான ரோடு
உடுமலை - பழநி நெடுஞ்சாலை ரோடு முறையான பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் சரியாக கவனிக்காத பட்சத்தில் வாகனங்கள் குழிக்குள் இறங்கி விபத்துக்குள்ளாகும் அளவுக்கு தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சமும் இல்லாததால், உடுமலை-பழநி ரோட்டில் பயணம் செய்வது வாகன ஓட்டுநர்களுக்கு சவாலாகவே மாறிவிட்டது.
- பிரபாகரன், உடுமலை.
நிழற்கூரை இல்லை
உடுமலை, போடிபட்டி முருகன் கோவில் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு நிழற்கூரை வசதி இல்லை. நாள்தோறும் அந்த பஸ் ஸ்டாப்பை பள்ளி குழந்தைகள் உட்பட நுாற்றுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர். முதியவர்கள் பஸ் வரும் நேரம் வரை அமர்ந்து காத்திருக்கவும் இடமில்லாமல் அவதிப்படுகின்றனர்.
- ரேவதி, போடிபட்டி.
கால்வாயில் கழிவுநீர்
உடுமலை, பழநி ரோடு கழுத்தறுத்தான் பள்ளத்தில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வடிகாலில் கழிவுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.