/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம்; வெட்டுவது 600; நடுவது 6000 மரங்கள்
/
மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம்; வெட்டுவது 600; நடுவது 6000 மரங்கள்
மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம்; வெட்டுவது 600; நடுவது 6000 மரங்கள்
மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம்; வெட்டுவது 600; நடுவது 6000 மரங்கள்
ADDED : பிப் 03, 2025 11:59 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அவிநாசி  இடையே உள்ள சாலையை, நான்கு வழிச் சாலையாக மாற்ற இருப்பதால், சாலையோரத்தில் உள்ள, 600 மரங்கள் வெட்டப்பட உள்ளன. அதற்கு  பதிலாக மேட்டுப்பாளையம் தாலுகா முழுவதும், 6000 மரக்கன்றுகளை நடும் பணிகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும், இணைப்பு சாலையாக மேட்டுப்பாளையம், அன்னுார், அவிநாசி சாலை அமைந்துள்ளது. 38 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை, இரண்டு வாகனங்கள் செல்லும் அளவில் உள்ளது. போக்குவரத்து நெரிசலால், இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து தமிழக அரசு, 70 கோடி ரூபாய் செலவில்,  மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை, இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சாலையை விரிவாக்கம் செய்யும் போது,  சாலையின் ஓரத்தில் உள்ள மரங்கள்  வெட்டப்பட உள்ளன. மேலும்  தற்போது சாலையின் இருபுறம், அளவீடு செய்யும் பணிகளும், எந்தந்த இடங்களில், தனியார் இடங்களை ஆர்ஜிதம் செய்வது குறித்த பணிகளும்  நடைபெறுகின்றன.
இது குறித்து மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை உள்ள சாலையை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் துவங்கியுள்ளன.   சாலை விரிவாக்கம் செய்யும்போது, சாலையின் இரு புறம் உள்ள, 600 மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெட்டிய மரங்களுக்கு ஈடாக, மேட்டுப்பாளையம் தாலுகாவில், அன்னுார்- காரமடை சாலை, சிறுமுகைச்சாலை, தோலம்பாளையம் சாலை உள்பட நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளின் ஓரத்தில், 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அன்னுாரில் இருந்து சிறுமுகை வரையிலும்,  அன்னுாரில் இருந்து காரமடை வரையிலும், சாலையின் இரு புறமும், 2500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
தற்போது காரமடை தோலம்பாளையம், வெள்ளியங்காடு சாலையில் ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளன. வேம்பு, புங்கன், மகாகனி உள்ளிட்ட மரக்கன்றுகளை நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன,'' என்றார்.

