/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்! தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேதனை
/
பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்! தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேதனை
பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்! தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேதனை
பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்! தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேதனை
ADDED : பிப் 01, 2024 05:50 AM

கோவை : ''பிளாஸ்டிக் பயன்பாட்டின் அதிகரிப்பால், மனிதர்கள் மட்டுமல்ல; ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்தில் கூட மைக்ரோபிளாஸ்டிக் உள்ளதாக கூறப்படுகிறது. இயற்கை பாதுகாப்பில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்,'' என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் சமூக சேவையாற்றுதல் மற்றும் சமூக பாதுகாப்பு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக துவங்கிய பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டம்; கின்னஸ் சாதனையாக நேற்றைய நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டது.
கல்லுாரி மாணவர்கள் ஒருங்கிணைந்து, இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த எட்டு மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டில்களை, நகரின் பல்வேறு இடங்களில் இருந்து, சேகரிக்க துவங்கினர். இச்சேகரிப்பு, கின்னஸ் சாதனை நிறுவன பிரதிநிதிகளால் நேற்று எடை போடப்பட்டது. காலை நிகழ்வில், பிளாஸ்டிக் முழுவதும் எடை போடப்பட்டு மொத்தமாக, 79.73 டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
இப்பிளாஸ்டிக் ஒட்டுமொத்தமாக, மறுசுழற்சி செய்யப்பட உள்ளதாக, கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில், பங்கேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதா வது:
மனிதர்களை தவிர பிளாஸ்டிக் பொருட்களை, வேறு உயிரினங்கள் பயன்படுத்துவது கிடையாது. பிளாஸ்டிக் பயன்பாட்டால், உலகின் அனைத்து உயிரினங்கள் மட்டுமின்றி, மண், நீர், காற்று என அனைத்து வளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பிறக்கும் குழந்தையின் ரத்தத்தில் கூட, 'மைக்ரோ பிளாஸ்டிக்' இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிகிறது. மனிதர்கள் உட்கொள்ளும் உணவு வாயிலாக நமக்குள் கலந்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைகிறது. இயற்கையை பாதுகாக்க வேண்டியது, நம் அனைவரின் கடமை. இயற்கையை நாம் பாதிப்படைய வைத்தால், இயற்கை வாயிலாகவே நமக்கு விளைவுகள் கடுமையாக திரும்ப வரும்.
ஐ.பி.சி.சி., அறிக்கை படி, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வதை நாம், 2030ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்; தவறும் பட்சத்தில் பேரிடர்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். இதற்காக, நாம் பயன்படுத்தும் எரிபொருள், மின்சாரம் அனைத்திலும், 43 சதவீதம் ஆற்றல் புதுப்பிப்பு முறைக்கு மாறவேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இம்மாற்றத்திற்கு உட்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கின்னஸ் சாதனையில் பங்கேற்ற, அனைவரும் இந்நிகழ்வில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், கல்லுாரி செயலர் கண்ணையன், முதல்வர் பிருந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.