/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அட்டப்பாடியில் தினை சாகுபடி திட்டம்: தீவிரம் சிறுதானியங்களுக்கு ஆர்கானிக் சான்று
/
அட்டப்பாடியில் தினை சாகுபடி திட்டம்: தீவிரம் சிறுதானியங்களுக்கு ஆர்கானிக் சான்று
அட்டப்பாடியில் தினை சாகுபடி திட்டம்: தீவிரம் சிறுதானியங்களுக்கு ஆர்கானிக் சான்று
அட்டப்பாடியில் தினை சாகுபடி திட்டம்: தீவிரம் சிறுதானியங்களுக்கு ஆர்கானிக் சான்று
ADDED : ஜன 07, 2024 01:39 AM

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ளது அட்டப்பாடி. பழங்குடியின மக்கள் அதிகளவில் உள்ள இங்கு, தினை சாகுபடி திட்டம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த, 2017ல் திட்டம் துவங்குவதற்கு முன், அட்டப்பாடி பகுதியில் சுமார், 150 ஏக்கரில் தினை சாகுபடி செய்து வந்தனர். ஒரு ஆண்டில், ஏப்., மாதம் முதல் செப்., மாதம் வரை ஒரு சீசனும், செப்., முதல் ஜன., மாதம் வரை இரண்டாவது சீசனிலும் விவசாயம் செய்கின்றனர்.
முதல் கட்டமாக, 40 பகுதிகளில் துவங்கிய தினை சாகுபடி திட்டம், தற்போது, 97 பகுதிகளில் விரிவடைந்துள்ளது. ஒரு சீசனில், சராசரியாக, 250 டன் தினை உற்பத்தி செய்யப்படுகிறது. தவிர, 40 டன் பருப்பு வகைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும், ராகி, சாமை, குதிரைவாலி, கம்பு, மக்காச்சோளம் ஆகியவையும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது சிறுதானிய சாகுபடி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
தினை சாகுபடி திட்ட வேளாண் அதிகாரி ரஞ்சித் கூறுகையில்:
பழங்குடியின மக்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில், வேளாண் துறை மற்றும் பழங்குடியின நலத்துறை ஒருங்கிணைந்து, அட்டப்பாடியின் மூன்று பஞ்சாயத்துகளில் இந்த திட்டத்தை துவங்கியுள்ளது.
பழகுடியின மக்களின் பாரம்பரிய விவசாய முறையை மீட்டெடுப்பது, அட்டப்பாடி மக்களின் தனித்துவமான உணவான தினை சாகுபடி பரப்பையும், உற்பத்தியையும் பெருக்கி, அன்றாட உணவில் தினையை சேர்ப்பது திட்டத்தின் நோக்கமாகும்.
இங்குள்ள, 926 சிறுதானிய விவசாயிகளின் 741.91 ஏக்கர் நிலத்தில் சாகுபடி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின், கேரளாவில் உள்ள ஆர்கானிக் சர்டிபிகேஷன் ஏஜன்சி வாயிலாக, இங்கு சாகுபடி செய்யப்படும் விளைபொருட்களுக்கு ஆர்கானிக் சான்றிதழ் கிடைத்துள்ளன.
மேலும், 350 ஏக்கர் நிலத்தில் செய்யும் விவசாயத்திற்கு ஆர்கானிக் சான்றிதழ் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சான்றிதழ் கிடைப்பதால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
இங்கு விவசாயம் செய்யும் துவரை, 'ஆட்டுகொம்பு' அவரைக்காய் என்ற பெயர் பெற்ற அவரைக்காய் ஆகியவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு சிறு தானிய பதப்படுத்தும் மையம், புதுார் சீரக்கடவில் செயல்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.