/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் கனிம வள கொள்ளையர் தப்பி ஓட்டம்! விவசாயிக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறை
/
கோவையில் கனிம வள கொள்ளையர் தப்பி ஓட்டம்! விவசாயிக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறை
கோவையில் கனிம வள கொள்ளையர் தப்பி ஓட்டம்! விவசாயிக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறை
கோவையில் கனிம வள கொள்ளையர் தப்பி ஓட்டம்! விவசாயிக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறை
ADDED : மே 02, 2025 02:42 AM

கோவை:கோவையில் தொடர்ந்து வரும் கனிம வள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், வருவாய்த்துறையும், மாவட்ட நிர்வாகமும் திணறி வருகிறது. கனிம வள கொள்ளையர்களை தப்பி ஓட விட்டு விட்டு, கனிம வளம் வெட்டி எடுக்கப்பட்ட இடத்துக்குச் சொந்தக்காரரான விவசாயிக்கு, ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் பட்டா நிலங்கள், வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களில், 30 அடி ஆழத்துக்கு செம்மண் வெட்டி, கடத்தப்பட்டது. ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, செம்மண் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது. செங்கல் சூளைகள் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. அதன்பின், மண் கொள்ளையர்கள் இடத்தை மாற்றி, பேரூர், ஆலாந்துறை, செம்மேடு, தொண்டாமுத்துார் பகுதிகளில் இருந்து செம்மண் கடத்தினர். அப்பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பை பலப்படுத்தியதால், அங்கிருந்து இடம் பெயர்ந்து, மதுக்கரை தாலுகாவில் கனிம வள கொள்ளையை துவக்கியுள்ளனர்.
கனிம வளம் கொள்ளை
நேற்று முன்தினம் மதுக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட எட்டிமடை கிராமத்தில், கணேசன் என்ற விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில், 11 அடி ஆழத்துக்கு, 3,000 கன மீட்டர் அளவுக்கு பொக்லைன் உதவியோடு, மண் வெட்டப்பட்டு, லோடு லோடாக லாரிகளில் கடத்தியுள்ளனர். கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார், கனிம வளத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர்கள் பஞ்சலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் பிரதாப், மதுக்கரை போலீசார் உள்ளிட்ட குழுவினர் கனிம வள கொள்ளை நடந்த பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
மண் கொள்ளையடிக்கப்பட்ட இடம், விவசாயி கணேசனுக்கு சொந்தமானது என்பது விசாரணையில் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. விவசாயிக்கு ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வழக்கு பதியப்பட்டது. அவர் கொடுத்த தகவலின்படி, கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விவகாரத்தில், கனிம வளத்தை லோடு லோடாக வெட்டி கடத்திய கொள்ளையர்களை தப்ப விட்டு விட்டு, விவசாயி மீது வழக்கு பதிந்ததோடு, அபராதம் விதித்திருப்பது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார் கூறுகையில், ''கனிம வள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனம், கனிம வளம், வருவாய், போலீஸ் துறை இணைந்து குழு அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்கிறது. கொள்ளையர்கள் இடத்தை மாற்றி, மாற்றி கனிம வள கொள்ளையில் ஈடுபடுகின்றனர். அவர்களை சுற்றிவளைக்கும் பணியில் போலீசாரும் வருவாய்த்துறையினரும் இறங்கியுள்ளனர். இப்பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்,'' என்றார்.
//
போத்தனூர், மே 2 -
கோவை எட்டிமடையில் அரசு அனுமதியின்றி மண் அள்ளிய நில உரிமையாளர் மகன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
க.க.சாவடி அருகேயுள்ள எட்டிமடையில் வசிப்பவர் கணேசன். இவருக்கு சொந்தமாக தனியார் பல்கலை அடுத்து சுமார், 12 ஏக்கர் நிலம் வடகாடு பகுதியில் உள்ளது. இதில் பெரும்பகுதி பயன்பாடின்றி போடப்பட்டுள்ளது.
இந்நிலத்தில் தினமும் இரவு, 10:00 முதல் மறுநாள் அதிகாலை, 4:00 மணி வரை மண் அள்ளப்பட்டது. இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
முன்னதாக இத்தகவலறிந்த கோவை தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார், மதுக்கரை தாலுகா தாசில்தார் வேல்முருகன், பேரூர் சரக டி.எஸ்.பி. சிவகுமார், வருவாய் ஆய்வாளர் பஞ்சலிங்கம், எட்டிமடை வி.ஏ.ஓ., பிரதாப்குமார் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நேற்று காலை மண் அள்ளப்பட்ட இடங்களில் அளவீடு செய்யப்பட்டது. இதையடுத்து வி.ஏ.ஓ., பிரதாப்குமார் க.க.சாவடி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., திருமலைசாமி விசாரணை நடத்தி, இட உரிமையாளர் கணேசனின் மகன் திருநாவுக்கரசு, 45, டிரைவர்கள் பாலத்துறை கார்த்திகேயன், 33, ரஞ்சித்குமார்,27, சூலூர் ஞானபிரகாஷ், 29 ஆகியோரை கைது செய்தார்.
மேலும் இரு டிப்பர் லாரிகள் தலா ஒரு டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

