/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசாரணைக்கு வருகிறது கனிமவள கொள்ளை வழக்கு! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
/
விசாரணைக்கு வருகிறது கனிமவள கொள்ளை வழக்கு! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
விசாரணைக்கு வருகிறது கனிமவள கொள்ளை வழக்கு! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
விசாரணைக்கு வருகிறது கனிமவள கொள்ளை வழக்கு! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜூலை 17, 2025 10:40 PM
கோவை; கோவையில் நடந்த கனிமவள கொள்ளை தொடர்பான வழக்கு, 25ல் ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள் மற்றும் நீரோடைகளில் இருந்து லோடு லோடாக கனிம வளம் வெட்டி கடத்தப்பட்டது.
ஐகோர்ட் நியமித்த நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு செய்தபோது, சட்ட விரோதமாக செங்கல் சூளை செயல்பட்டது; கனிம வள கொள்ளை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இவ்வழக்கை, ஐகோர்ட் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கனிம வள கொள்ளையில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகள், கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்கு வெளியே வசிப்பதால், சி.பி.சி.ஐ.டி., நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் சிறப்பு புலனாய்வு குழுவை கொண்டு வர வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அக்குழு சி.பி.சி.ஐ.டி., நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படலாம்; அதேநேரத்தில், தன்னிச்சையாக விசாரணை நடத்த வேண்டும்.
சட்ட விரோதமாக கனிமம் எடுத்துச் சென்றதற்கு விதிக்கப்பட்ட அபராதம், இன்னும் எத்தனை வழக்குகளுக்கு அபராதம் விதிக்கவில்லை, ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை, எதிர்காலத்தில் எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே அபராதம் விதித்த வழக்குகளில் தொகையை வசூலிக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
காவல்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் தவறு செய்திருக்கிறார்களா என்பதை பற்றிய தகவல் இல்லை; அதைப்பற்றிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சட்ட விரோதமாக கட்டப்பட்ட பாலங்கள், அமைக்கப்பட்ட சாலைகளை விரைந்து அகற்ற வேண்டும். வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய இடங்களில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகளை சமப்படுத்த வேண்டும். ஏ.ஐ., கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான நிதியை விரைந்து ஒதுக்க வேண்டும்.
அண்ணா பல்கலை உள்ளிட்ட நிபுணர்கள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறை ஏற்படுத்த வேண்டும்; இதன் முன்னேற்றத்தை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். இணைய தளம் மற்றும் மொபைல் செயலி உருவாக்கும் பணியை விரைந்து முடித்து பொது பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
யானை வலசை பாதைகளாக அறிவிக்க இருக்கும் அல்லது அறிவிக்க பரிசீலனையில் உள்ள பகுதிகளை தமிழக அரசு விளக்க வேண்டும். இதுதொடர்பான அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்ய வேண்டும். யானை பாதையாக அறிவிக்க வாய்ப்பு இருந்தால், புதிதாக மேம்பாட்டு நடவடிக்கைகளை அனுமதிப்பதில், எவ்வித நியாயமும் இல்லை.
இவ்வழக்கு, 25ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன், சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள், முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, உத்தரவிட்டுள்ளனர்.

