/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமவள கொள்ளை விவகாரம்; விசாரணை அதிகாரி மாற்றம்
/
கனிமவள கொள்ளை விவகாரம்; விசாரணை அதிகாரி மாற்றம்
ADDED : மே 01, 2025 11:52 PM
கோவை; கோவை மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடைகள், மலைக்குன்றுகள்மற்றும் பட்டா நிலங்களில், அனுமதியின்றி கிராவல் மண், செம்மண் வெட்டி எடுத்து கடத்தப்பட்டது. நீதிபதிகள் குழு கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அக்குழு, கோவையில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறது.
இச்சூழலில், 'தடாகம் பகுதியில் இப்போதும் செம்மண் கடத்தல் தொடர்கிறது. தடாகம் பள்ளத்தாக்கு பகுதியிலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும்' என, ஐகோர்ட்டில், வன ஆர்வலர் முரளிதரன் முறையிட்டார்.
இதையேற்ற ஐகோர்ட் நீதிபதிகள் டி.பரதசக்ரவர்த்தி, என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, 'சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு செயல்படும். இக்குழு இதுவரை இருந்த அதே வேகத்தில் விசாரணையை தொடர வேண்டும். தடாகம் பகுதியையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். தற்போதுள்ள அறிக்கையை ஜூன், 6ல் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
கனிம வள கொள்ளை தொடர்பாக, சென்னை மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி., நாகஜோதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வந்தனர். இச்சூழலில், எஸ்.பி., நாகஜோதி குடும்பத்தில் ஏற்பட்ட துக்க நிகழ்வால், தொடர்ந்து விடுப்பில் இருப்பதால், இடையூறின்றி, விசாரணையை தொடர்ந்து நடத்த, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உடனடியாக, புதிய எஸ்.பி.,யை ஐகோர்ட் நியமித்து, உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.