/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலுமிச்சம்பட்டியில் 3.98 ஏக்கரில்... மினி ஸ்டேடியம் !நில அளவீடு பணி முடிந்தது
/
மலுமிச்சம்பட்டியில் 3.98 ஏக்கரில்... மினி ஸ்டேடியம் !நில அளவீடு பணி முடிந்தது
மலுமிச்சம்பட்டியில் 3.98 ஏக்கரில்... மினி ஸ்டேடியம் !நில அளவீடு பணி முடிந்தது
மலுமிச்சம்பட்டியில் 3.98 ஏக்கரில்... மினி ஸ்டேடியம் !நில அளவீடு பணி முடிந்தது
UPDATED : அக் 03, 2025 12:41 AM
ADDED : அக் 02, 2025 10:54 PM

கோவை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோவை மாவட்டத்தில் தொகுதிக்கு ஒன்று வீதம், 10 இடங்களில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படுகின்றன. முதற்கட்டமாக, கிணத்துக்கடவு தொகுதியில், மலுமிச்சம்பட்டி பகுதியில் 3.98 ஏக்கரில் உருவாக்க நில அளவீடு செய்து, இறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு தேவையான பயிற்சி, நிதியுதவி, கட்டமைப்பு வசதிகளை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்து தருகிறது.
கோவையில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறையாக இருந்து வந்தது. இது அரசின் கவனத்துக்குச் சென்றதும் விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, மினி ஸ்டேடியம் அமைக்க, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து ரூ.2.5 கோடி, தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் ரூ.50 லட்சம் என, 3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 400 அல்லது 200 மீட்டர் ஓடுதளம், அலுவலகம், கேலரி, கைப்பந்து, வலைப்பந்து, கபடி, கோ-கோ, கால்பந்து ஆடுகளங்கள் மற்றும் கழிப்பட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி கூறுகையில், ''விளையாட்டு வசதிகளை மேம்படுத்த, கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியில் நில அளவீடு முடிந்துள்ளது. பொள்ளாச்சி தொகுதியில் புரவிபாளையத்தில் கல்வித்துறைக்கு சொந்தமான இடம் அல்லது வடக்கிப்பாளையம் பகுதியில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதர தொகுதிகளில் பணிகள் விரைவில் துவங்கும்,'' என்றார்.
பயிற்சிக்கு வாய்ப்பு புதிய மினி ஸ்டேடியங்கள் அமைவதன் மூலம், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை எளிதாக நடத்த முடியும். இது, உள்ளூர் வீரர்களுக்கு முறையான பயிற்சி பெற சிறந்த வாய்ப்பாக அமையும். இதன் மூலம், கோவையில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவெடுப்பார்கள், என, உடற்கல்வி ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.