/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் நலனில் அக்கறை கொண்ட இதழ் 'தினமலர்' அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம்
/
மக்கள் நலனில் அக்கறை கொண்ட இதழ் 'தினமலர்' அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம்
மக்கள் நலனில் அக்கறை கொண்ட இதழ் 'தினமலர்' அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம்
மக்கள் நலனில் அக்கறை கொண்ட இதழ் 'தினமலர்' அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம்
ADDED : ஜன 31, 2025 02:02 AM

கோவை:''மக்கள் நலனில் அக்கறை கொண்ட, சமுதாய பிரச்னைகளை, தேவைகளை அறிந்து சொல்லும் இதழாக 'தினமலர்' இருக்கிறது,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம் சூட்டினார்.
கோவையில், மாநகராட்சி பள்ளிகளுக்கான 'பட்டம்' வினாடி - வினா போட்டியில் வென்றவர்களுக்கு விருது வழங்கி, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
'தினமலர்' நாளிதழ் 1951ல் துவங்கப்பட்டது; 74 ஆண்டுகளாகின்றன. கோவை பதிப்பு 1992ல் துவங்கப்பட்டு, 30 ஆண்டுகளை கடந்து விட்டது. சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
'தினமலர்' நாளிதழ் மாணவர்கள் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, ஜெயித்துக் காட்டுவோம், இன்ஜி., மாணவர்களுக்கான வழிகாட்டி, 'பட்டம்' மாணவர் பதிப்பு என, மாணவர்கள் நலனில் அக்கறை காட்டி வருகிறது.
வார இறுதி நாட்களில் ஆன்மிக மலர், சிறுவர் மலர், வாரமலர் என இதழ்களை வெளியிட்டும், கோவையில் அதிக வாசகர்களை கொண்ட நாளிதழாகவும் விளங்குகிறது.
கோவை மக்கள் நலனில் அக்கறை கொண்ட நாளிதழாக, சமுதாய பிரச்னைகளை, தேவைகளை அறிந்து சொல்லும் இதழாக இருக்கிறது 'தினமலர்!' அதேசமயம், அரசின் திட்டங்களையும் வெளியிட வேண்டும் என்பதையும் வேண்டுகோளாக வைக்கிறேன்.
சாலைகள் மோசம் என செய்தி வெளியிடும் அதே சமயம், கடந்த 3.5 ஆண்டுகளில், 415 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சிக்குள் மட்டும் 860 கி.மீ., நீளத்துக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை முதல்வர் கோவை வந்தபோது, மீண்டும் கோரிக்கை வைத்ததும் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சாலைகளை மேம்படுத்த பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
கோவையில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத நிலையிலும், முதல்வர் கோவைக்கு அதிக முறை வந்து, திட்டங்களை தந்துள்ளார். அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க, 'தினமலர்' இதழின் பங்கும் தேவை.
அரசு பள்ளி மாணவர்களுக்கும், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் 'தினமலர்' இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது வரவேற்கத்தக்கது.
நானும் அரசு பள்ளி மாணவன் தான். பள்ளி கல்விக்கு மட்டும் கடந்த பட்ஜெட்டில் 44,000 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவிலேயே பள்ளி கல்வித் துறைக்கு இவ்வளவு நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான்.
கல்வி என்பது அடிப்படை தேவை. எனவே தான், அதை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் என பல்வேறு திட்டங்களை அறிவித்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.