குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்! அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல்
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்! அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 21, 2026 04:46 PM
ADDED : ஜூலை 21, 2026 04:41 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில், கிணத்துக்கடவு வருவாய் துறையினர், ஒன்றிய அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் கலந்துரையாடலில், குப்பை மற்றும் குடிநீர் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் பேசியதாவது:
மக்களுக்கு வழங்க வேண்டிய, 4.72 எம்.எல்.டி., குடிநீரில், தற்போது, 3.3 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தெரு விளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பொதுக்கழிப்பிட வசதியை மேம்படுத்த வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி இல்லாததால், சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
கிணத்துக்கடவு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்படும் கட்டடங்கள் திறப்பு விழாவிற்கு, எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் வர வேண்டும் என எதிர்பார்க்காமல், அதிகாரிகளே, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கட்சிக்காரர்கள் சொந்த தேவைக்கு வரமாட்டார்கள், அப்படி வந்தால் என்னிடம் கூறுங்கள்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
அதன்பின், தனியார் பஸ் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் செல்வது மற்றும் பொது பிரச்னைகள் குறித்து, அமைச்சரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
