/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை கொட்டிய தமிழக அமைச்சர்கள்
/
கோரிக்கைகளை கொட்டிய தமிழக அமைச்சர்கள்
ADDED : பிப் 20, 2025 11:39 PM

கோவை; கோவையில் நேற்று நடந்த மேற்கு மண்டல உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் பலரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தமிழக மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் வளர்ச்சி பணி தொடர்பான ஆய்வு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்டு, அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டது.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''அதிகாரிகளும், ஒவ்வொரு துறையும் இணைந்து செயல்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு போடுகின்றனர். அருகில், மாநகராட்சி சாக்கடை கால்வாய் இருக்கிறது.
அதை விட உயரமாக ரோடு போடுகின்றனர். ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்கிறது. நான் சொல்வது உதாரணத்துக்கு ஒன்று. பல துறைகளில் இதேபோல் சென்று கொண்டிருக்கிறது. ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். வெறிநாய் பிரச்னையை பற்றி, பலரும் பேசினார்கள்.
முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்; விரிவான விளக்கம் கேட்டிருக்கிறார். பாதிப்பு ஏற்படும்போது, கலெக்டர் மூலமாக குறிப்பிட்ட நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதை உத்தரவாக போட வேண்டும். நாய்களை என்ன செய்வதென்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 33 வார்டுகளில், ஒரு லட்சம் மக்களை சந்தித்தோம். 140 கி.மீ., நடந்தே பயணித்தோம். 148 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தமிழக மின்வாரிய அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ''சூயஸ் குடிநீர் திட்ட பணிகளை, ஜனவரி மாதமே முடித்திருக்க வேண்டும். காலதாமதமாகி வருகிறது; இன்னும் மூன்று மாதங்களாகும் என கூறுகின்றனர். அப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்,'' என்றார்.
தமிழக செய்தி - மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''கால்நடைத்துறையுடன் இணைந்து பேசி, தெருநாய் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தியாக வேண்டும். கூடலுார் பகுதிக்கு குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும்,'' என்றார்.
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ''சில கிராமங்களில் மயானங்கள் பயன்படுத்துவதில் பிரச்னை இருக்கிறது. பேரூராட்சிகளில் உள்ள மின் மயானத்தை பயன்படுத்த கிராம மக்கள் கோருகின்றனர்.
''உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில், 20 சதவீதத்தை 'தாட்கோ'வுக்கு ஒதுக்க வேண்டும். அதற்குரிய தொகையை எங்கள் துறை செலுத்தி விடும். பட்டியலின மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். துாய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும்,'' என்றார்.
இதேபோல், அமைச்சர்கள் ராஜேந்திரன், கயல்விழி உள்ளிட்டோரும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், எம்.பி., ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.