/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இருந்து கலப்பு உரம் வினியோகம்
/
கோவையில் இருந்து கலப்பு உரம் வினியோகம்
ADDED : ஆக 04, 2025 08:18 PM
கோவை; துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) வாயிலாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, இதுவரை 300 டன் வேப்பம் பவுடர், 2,000 டன் கலப்பு உரம், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன மேலாண் இயக்குனர் பழனிசாமி கூறியதாவது:
பயிர்களுக்கு அடி உரம் என்பது இன்றியமையாதது. இதற்காக, தமிழ்நாடு கூட்டுறவு துறையில், துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், 2019 ஜூன் மாதம் வேப்பம் பவுடர் தயாரிப்பு துவங்கப்பட்டது.
பயிர்களுக்கு அடியுரமாக வேப்பம் பவுடர் இடுவதால், மருந்து அடிக்கும் தன்மை குறைந்து, பயிர்களுக்கு உண்மையான ஊட்டச்சத்து கிடைத்து விடும்.
இதிலுள்ள, அசாடிராக்டின்' என்ற கசப்பு தன்மை, வேரில் அப்படியே ஊடுருவுவதால், பயிர்களில் பூச்சித் தொல்லை இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீண்ட கால பயிராக இருந்தால், வருடத்துக்கு இரு முறையும், குறுகிய கால பயிராக இருந்தால், துவக்கத்திலும், வேப்பம் பவுடர் இடலாம்.
இங்கு தயாரிக்கப்படும் வேப்பம் பவுடர், கலப்பு உரங்கள், விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளதால், திருவண்ணாமலை, மதுரை, கரூர், திருச்சி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல மாவட்டங்களில் உள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், 5,000 டன் கலப்பு உரம் அனுப்பப்படும் நிலையில், நடப்பாண்டில் இதுவரை 2,000 டன் கலப்பு உரம் அனுப்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரம் டன் வேப்பம் பவுடர் அனுப்பப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை 300 டன், பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.