/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாரிகளை மிரட்டும் ஆளுங்கட்சி பிரமுகர் எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
/
அதிகாரிகளை மிரட்டும் ஆளுங்கட்சி பிரமுகர் எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
அதிகாரிகளை மிரட்டும் ஆளுங்கட்சி பிரமுகர் எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
அதிகாரிகளை மிரட்டும் ஆளுங்கட்சி பிரமுகர் எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
ADDED : ஜன 20, 2024 01:04 AM

பொள்ளாச்சி:'ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகளை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் மிரட்டி வளர்ச்சிப்பணிகளை தடுத்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது,' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சி தலைவராக சியாமளா உள்ளார். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் திடல், கோட்டூர் ரோடு பகுதிகளில் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் நிழற்கூரை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்கவில்லை.
மேலும், நிழற்கூரை அமைக்க அனுமதி வழங்குவதில் நகராட்சி நிர்வாகம் இழுத்தடித்தது. இதை கண்டித்து, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினருடன் நகராட்சி அலுவலகத்தை சமீபத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
நகராட்சி நிர்வாகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுங்கட்சி பிரமுகர் தலையீடு அதிகரித்துள்ளது. லஞ்சம், ஊழலில் பொள்ளாச்சி நகராட்சி முதலிடத்தில் உள்ளது என, எம்.எல்.ஏ., பகிரங்கமாக அறிவித்தார்.
இந்நிலையில், பொள்ளாச்சி ஜோதிநகரில் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் ரேஷன் கடை கட்டுவதற்கு வழங்கிய அனுமதியும் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:
பொள்ளாச்சி எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், நகராட்சி பகுதியில், நிழற்கூரைகள் கட்ட இடம் தேர்வு செய்து ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் துவங்க பூமி பூஜை போடப்பட்டது; இப்பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடை கட்ட இடம் தேர்வு செய்த நிலையில், பணிகள் துவங்க தடை விதிக்கப்படுகிறது. கலெக்டர், நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் இதை செய்கிறார். ஓய்வு பெறும் வயதில் உள்ள அதிகாரிகளை மிரட்டி, இதை செய்யும் அந்த நபர் யார் என அனைவருக்கும் தெரியும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதனால், நகராட்சியில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது என்றும், மோசமான செயல்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது என கூறுகிறோம்.
கடந்த, ஒரு வாரமாக நகராட்சியில் குப்பை அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதையெல்லாம் சரி செய்யப்படாமல், அதிகாரிகளை மிரட்டும் அந்த நபர் திருத்திக்கொள்ளாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.