/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மொபைல் பேங்கிங்' சேவை; தபால் துறையினர் அழைப்பு
/
'மொபைல் பேங்கிங்' சேவை; தபால் துறையினர் அழைப்பு
ADDED : ஆக 20, 2025 09:48 PM
கோவை; இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்தி, ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறியதாவது:
தபால் துறையில் துவக்கத்தில் துவங்கப்பட்ட கணிசமான கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்குக்கு வாரிசு நியமித்தால், கணக்குதாரர் இறப்புக்கு பின், சேமிப்புத்தொகையை எளிதாக விரைந்து வாரிசுதாரர் பெற முடியும். தபால் துறையின் அனைத்து வித சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்வதற்கான வசதி, கோவை கோட்ட தபால் நிலையங்களில் உள்ளது.
'ப்ளே ஸ்டோரில்' IPPB என்கிற மொபைல் செயலி வாயிலாக, கணக்கு துவங்கிய வாடிக்கையாளரே, வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
இச்செயலி மற்றும் தபால்காரரின் உதவியுடன், தங்கள் கணக்குகளில் ஆதார் இணைப்பு செய்து, அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாக பெறலாம்.
வாடிக்கையாளர் தங்களுடைய IPPB வங்கி கணக்குடன், அவர்களுடைய தபால் சேமிப்பு கணக்கை இணைத்து, ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
தபால் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை, IPPB கணக்கிற்கு அனுப்பி, மற்ற வங்கி கணக்கிற்கும் அனுப்பலாம்.
தபால் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், புதிதாக, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி, இரு கணக்கையும் இணைத்துக் கொண்டால் பல்வேறு பயன் பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.