
கோவை ; கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மிதமான மழை பொழிந்தது.
அரபிக்கடல் பகுதிகளில், காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால் கோவை, நீலகிரி உட்பட தமிழகத்தின், 19 மாவட்டங்களில், நேற்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது. தொடர்ந்து மாலையில் காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், கணபதி, ராமநாதபுரம், சுங்கம், ஆர்.எஸ்.புரம், உக்கடம், வடவள்ளி, தொண்டாமுத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழைப்பொழிவு இருந்தது.
திடீர் மழையால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.