/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழை தீவிரம்; அணைகள் நீர்மட்டம் உயர்வு
/
பருவமழை தீவிரம்; அணைகள் நீர்மட்டம் உயர்வு
ADDED : மே 27, 2025 07:53 PM

பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலையில் பெய்யும் தென்மேற்கு பருவமழையால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. கனமழை பெய்வதால், ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை, 25.55 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 45.15 அடியானது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம், 20 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு, 4,515 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.
இதேபோன்று, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
உடுமலை
தென்மேற்கு பருவ மழை முன்னதாகவே துவங்கியுள்ள நிலையில், அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள, கேரளா மாநிலம் மூணாறு, தலையாறு, மறையூர், காந்தலுார் மற்றும் வால்பாறை கிழக்கு பகுதி, கொடைக்கானல் மேற்கு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, நான்கு மாதங்களுக்கு பின், அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 51.25 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒரே நாளில், நீர்மட்டம் ஆறு அடி உயர்ந்துள்ளது.
நேற்று காலை அணை நீர்மட்டம், 57.58 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு, 4,006 கனஅடி நீர் வரத்தாக இருந்தது.
நீர் திறக்கணும்!
பருவமழை துவங்கி, அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையிலிருந்து, அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில், குறுவை நெல் சாகுபடிக்கு, வரும், ஜூன் 7ல் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு - 61, பரம்பிக்குளம் - 70, ஆழியாறு - 28, வால்பாறை - 58, மேல்நீராறு - 116, கீழ்நீராறு - 70, காடம்பாறை - 30, மேல்ஆழியாறு - 18, சர்க்கார்பதி - 40, வேட்டைக்காரன்புதுார் - 48, மணக்கடவு - 43, துணக்கடவு - 52, பெருவாரிப்பள்ளம் - 50, நவமலை - 24, பொள்ளாச்சி - 44, உடுமலை - 16, அமராவதி - 23, திருமூர்த்தி - 28, மடத்துக்குளம் - 10, வரதராஜபுரம் - 14, பெதப்பம்பட்டி - 13, பூலாங்கிணறு - 10, நல்லாறு - 11, உப்பாறு - 8 என்ற அளவில் மழை பெய்தது.
- நிருபர் குழு -