ADDED : செப் 25, 2026 08:11 PM
சூலூர்: கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டுகளில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து கொசு மருந்து அடிக்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குழுவினர், நகராட்சி பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம், நூலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் தேங்கி கிடந்த குப்பையை அகற்றினர். மழை நீர் தேங்காதவாறு, குழாய்களில் அடைப்பை நீக்கினர். கொசுப்புழு உற்பத்தி ஆகும் வகையில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தினர்.
நகராட்சி கமிஷனர் பாரதி கூறுகையில், வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில் கொசு புழுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க, நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும், என்றார்.
