/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாட்டிலேயே அதிக ஏ.டி.எம்.,கள்; 9வது இடத்தில் கோவை
/
நாட்டிலேயே அதிக ஏ.டி.எம்.,கள்; 9வது இடத்தில் கோவை
ADDED : நவ 12, 2024 05:49 AM

கோவை ; நாட்டிலேயே அதிக ஏ.டி.எம்.,களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாவட்ட அளவில், இந்தியாவில் கோவை 9வது இடத்தில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த செப்., வரை இந்தியாவில், ஏ.டி.எம்.,கள், பணம் செலுத்தவும் எடுக்கவும் வசதி கொண்ட சி.ஆர்.எம்.,கள், வங்கி அல்லாத நிறுவனங்களால் நடத்தப்படும் டபிள்யூ.எல்.ஏ.,க்கள் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 ஏ.டி.எம்.,கள் உள்ளன.
இதில், 29 ஆயிரத்து 965 ஏ.டி.எம்.,களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 28 ஆயிரத்து 443 ஏ.டி.எம்.,களுடன் மஹாராஷ்டிரமும், 23 ஆயிரத்து 933 ஏ.டி.எம்.,களுடன் உ.பி.,யும் முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களில் மட்டும்தான் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்.,கள் உள்ளன.
நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் அடிப்படையில், புறநகரையும் சேர்த்து பெங்களூருவில் 7 ஆயிரத்து 746 ஏ.டி.எம்.,கள் உள்ளன. மும்பையில், 5 ஆயிரத்து 540 ஏ.டி.எம்.,கள் உள்ளன. 3வதாக சென்னையில், 5,008 ஏ.டி.எம்.,கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 360 ஏ.டி.எம்.,கள் உள்ளன.
தேசிய அளவில், பெங்களூரு, மும்பை, சென்னை, புனே, ஹைதராபாத், தானோ, ஆமதாபாத், கொல்கட்டாவைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் 9வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில்தான் அதிக ஏ.டி.எம்.,கள் உள்ளன. பாட்னா, ஜெய்பூர், லக்னோ உள்ளிட்ட பெரும்பாலான வட இந்திய மாநிலத் தலைநகர்களை விடவும், கோவை மாவட்டத்தில் அதிக ஏ.டி.எம்.,கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.