/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் மழை நீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி
/
ரோட்டில் மழை நீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 22, 2025 11:41 PM

சூலுார்: வெங்கிட்டாபுரம் -குளத்தூர் ரோட்டில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சின்னியம்பாளையத்தில் இருந்து வெங்கிட்டாபுரம் வழியாக குளத்தூர் செல்லும் ரோடு உள்ளது. அவிநாசி ரோட்டில் இருந்து நீலம்பூர் பை - பாஸ் ரோடு வழியாக, கேரளா செல்லும் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. இருகூரில் உள்ள ஆயில் நிறுவனங்களுக்கு செல்லும் டேங்கர் லாரிகள் இந்த ரோட்டில் செல்கின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெங்கிட்டாபுரம் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் அருகேயும், பவுண்டரி அருகே உள்ள வளைவிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழை நீர் வெளியேற வழியில்லாததால், ரோடும் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,' ரோட்டில் இருந்து மழை நீர் வெளியேற வழியில்லாததால், குளம் போல் தேங்கியுள்ளது. எங்கு பள்ளம் உள்ளது என, தெரியாமல் வாகனங்களை இயக்கி சிலர் விபத்துக்குள்ளாகினர். இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற வழி செய்து, ரோட்டை செப்பனிட வேண்டும்' என்றனர்.