/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 17, 2025 12:25 AM

மேட்டுப்பாளையம்: காரமடை அடுத்த, கெம்மாரம்பாளையம் ஊராட்சியில், ரங்கராஜபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள சாலைக்கு தார் போட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
இதனால் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, மேடு பள்ளமாகவும், ஜல்லிக்கற்கள் நிறைந்த சாலையாகவும் உள்ளது. இதனால் இவ்வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்ல, மக்கள் சிரமம் அடைகின்றனர்.
இது குறித்து ரங்கராஜபுரம் பொதுமக்கள் கூறுகையில், 'ரங்கராஜபுரம் அருகே தனியார் பேப்பர் கம்பெனி உள்ளது.
இக்கம்பெனிக்கு ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர், வெள்ளியங்காடு, கண்டியூர், ஆஸ்பத்திரி மேடு, ரங்கராஜபுரம் ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு சவால்கள் நிறைந்த சாலையாக உள்ளது. இரவில் பலர் விபத்துக்குள்ளாகி, கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
மேலும் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கும், மேட்டுப்பாளையம் நகருக்கும் இந்த சாலை வழியாக, ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
எனவே ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ள இந்த சாலைக்கு, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், தார் சாலை அமைக்க வேண்டும்' என்றனர்.

