ADDED : பிப் 02, 2026 05:04 AM

வால்பாறை: வால்பாறையில் உள்ள ரோடுகளை சீரமைக்கும் பணி நடப்பதால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகாமல் இருக்க நெடுஞ்சாலை துறை சார்பில் முக்கியமான இடங்களில் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதே போல், வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வேகத்தடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் ரோட்டில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் சில இடங்களில் ரோடு பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. அப்பகுதியில் சீரமைக்கும் பணி வேகமாக நடப்பதால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான ரோட்டில்,கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்த தடுப்புச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. இது தவிர, இடையிடையே பழுதடைந்த பகுதிகளில் ரோடு சீரமைக்கப்படுகின்றன.
முதல் கட்டமாக, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், சேதமடைந்த ரோடுகள் சீரமைக்கும் பணி நடக்கிறது. மீதமுள்ள ரோடுகளும் மழைக்கு முன்னதாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
