/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நத்தை வேகத்தில் நகர்கிறது... பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வுக்கூட்டத்தில் குமுறல்
/
நத்தை வேகத்தில் நகர்கிறது... பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வுக்கூட்டத்தில் குமுறல்
நத்தை வேகத்தில் நகர்கிறது... பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வுக்கூட்டத்தில் குமுறல்
நத்தை வேகத்தில் நகர்கிறது... பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வுக்கூட்டத்தில் குமுறல்
ADDED : ஏப் 21, 2025 10:16 PM
கோவை, ;மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை, 'அம்ரூத்' திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி தலைமையில், 20 வார்டுகள் வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக வார்டு கவுன்சிலர்கள் குமுறித்தீர்த்தனர்.
அப்போது, கவுன்சிலர்கள் பேசியதாவது:
வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகளில், பெரும்பாலான வார்டுகளில், 10 பேர்தான் உள்ளனர். பிரிந்து வேலை செய்யும் இவர்களால், நாள் ஒன்றுக்கு இரு வீடுகளுக்குதான் இணைப்பு வழங்க முடிகிறது.
இப்படியிருக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் இடங்களில் எப்போது பணிகளை முடிப்பது. மறுபுறம் விடுபட்ட பகுதிகளில் ரோடு போடும் பணிகளும் நடக்கின்றன.
'அம்ரூத்' திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கவும், பதித்த இடங்களில் சோதனை செய்யும்போது குடிநீர் கசியும் இடங்களில் ரோட்டை தோண்டுவதால், புதிதாக போடப்பட்ட ரோடும் மோசமாகிறது.
குறிப்பாக, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, துடியலுார் பகுதிகளில் பணிகளை வேகப்படுத்த வேண்டியுள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே, குறித்த காலத்துக்குள் இப்பணிகளை முடிக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
இதையடுத்து, திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், சேதமடைந்த சாலைகளை விரைவாக சீர் செய்யவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.