/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சி பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்.பி.,; முட்டுக்கட்டை போட்ட தி.மு.க., பிரமுகர்
/
வளர்ச்சி பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்.பி.,; முட்டுக்கட்டை போட்ட தி.மு.க., பிரமுகர்
வளர்ச்சி பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்.பி.,; முட்டுக்கட்டை போட்ட தி.மு.க., பிரமுகர்
வளர்ச்சி பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்.பி.,; முட்டுக்கட்டை போட்ட தி.மு.க., பிரமுகர்
ADDED : ஜூலை 02, 2025 09:41 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, எம்.பி., அடிக்கல் நாட்டிய மயான சுற்றுச்சுவர் கட்டும் பணியை, தி.மு.க., பிரமுகர் தலையிட்டு முட்டுக்கட்டை போட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், போடிபாளையம் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், ஊராட்சி அலுவலகம் மற்றும் மயான சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென கடந்த, 2024ம் ஆண்டு முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், ஊராட்சி அலுவலகம் மற்றும் மயான சுற்றுச்சுவர் கட்ட 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சுற்றுச்சுவர் கட்டுவதற்காக ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஊராட்சி அலுவலகம் மற்றும் மயான சுற்றுச்சுவர் கட்டுவதற்காக கடந்த மாதம் எம்.பி., ஈஸ்வரசாமி தலைமையில் பூமி பூஜை நடந்தது.
இந்நிலையில், போடிபாளையம் - நஞ்சேகவுண்டன்புதுார் ரோட்டில் உள்ள மயானத்தில், சுற்றுச்சுவர் கட்டுவதற்காக ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு பணிகளை மேற்கொள்ள கூடாது என, தனிநபர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு பொதுமக்களுடன் சென்ற முன்னாளர் ஊராட்சி தலைவர் ராஜா, ''தனியார் இடம் ஏற்கனவே அளவீடு செய்து கல் நடப்பட்டுள்ளது. தற்போது, மயான இடத்தில், 10 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மயான இடத்தை பாதுகாக்க சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது,'' என்றார்.
இதையடுத்து, தனிநபர், தகாத வார்த்தைகளால் முன்னாள் ஊராட்சி தலைவரை திட்டியதாக கூறப்படுகிறது. முன்னாள் ஊராட்சி தலைவர், இது குறித்து தாலுகா போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அவர்கள், ஆனைமலை ஒன்றிய தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரின் உறவினர் என்பதால், தி.மு.க., பிரமுகர் வாயிலாக சுற்றுச்சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி, முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சி பிரமுகரின் தலையீட்டால், மயான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டதாக கூறப்படுகிறது. எம்.பி., பூமி பூஜை போட்ட பணியை, ஆளுங்கட்சி பிரமுகரே தடுத்து நிறுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.