/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.200 கோடியில் எம்.எஸ்.எம்.இ., மையம்; தொழில்துறையினர் மகிழ்ச்சி
/
ரூ.200 கோடியில் எம்.எஸ்.எம்.இ., மையம்; தொழில்துறையினர் மகிழ்ச்சி
ரூ.200 கோடியில் எம்.எஸ்.எம்.இ., மையம்; தொழில்துறையினர் மகிழ்ச்சி
ரூ.200 கோடியில் எம்.எஸ்.எம்.இ., மையம்; தொழில்துறையினர் மகிழ்ச்சி
ADDED : மே 29, 2025 11:50 PM

சூலுார்; கோவை அடுத்த அரசூரில், 200 கோடி ரூபாய் செலவில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் தொழில்நுட்ப மையம் அமைய உள்ளதால், தொழிற்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ( எம்.எஸ்.எம்.இ.,) துறை சார்பில், தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கேரளாவில் கொச்சி, தமிழகத்தில் கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட 18 இடங்களில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, கோவையில் மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. சூலுார் அடுத்த அரசூரில், 14. 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. கால்நடைத் துறைக்கு சொந்தமான இந்த இடத்தை, மாநில அரசு, எம்.எஸ்.எம்.இ., துறைக்கு ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து மையம் அமைக்கும் பணிக்கு, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த இடத்தில் கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். மையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தில் அளவீட்டு பணிகளை மேற்கொள்ளவும், எல்லைகளை வரையறுக்கவும், உடனடியாக, சுற்றுச்சுவர் கட்டவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உடன் எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குனர்கள் கயல்விழி, ராஜேந்திரன், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சண்முக சிவா உள்ளிட்டோர் இருந்தனர்.
தொழில் நுட்ப மையம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மேம்பட்ட தொழில்நுட்ப ஆதரவு, திறன் மேம்பாடு மற்றும் வணிக ஆலோசனைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்க, நாடு முழுவதும் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்து , தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதே திட்டத்தின் நோக்கமாகும். பொது மற்றும் தனியார் கூட்டாண்மையில், உருவாக்குதல், செயல்படுத்துதல், பரிமாற்றம் எனும் முறையில் திட்டம் செயல்படுத்தப்படும்.