sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எம்.எஸ்.எம்.இ.,கள் 'ஸ்மார்ட் மேனுபாக்சரிங்' நோக்கி நகர வேண்டும்!

/

எம்.எஸ்.எம்.இ.,கள் 'ஸ்மார்ட் மேனுபாக்சரிங்' நோக்கி நகர வேண்டும்!

எம்.எஸ்.எம்.இ.,கள் 'ஸ்மார்ட் மேனுபாக்சரிங்' நோக்கி நகர வேண்டும்!

எம்.எஸ்.எம்.இ.,கள் 'ஸ்மார்ட் மேனுபாக்சரிங்' நோக்கி நகர வேண்டும்!

1


ADDED : செப் 30, 2025 10:50 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:50 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உ லக அரங்கில் தொழில்திறனுக்கும், புத்தாக்கத்துக்கும் தனி அடையாளத்தைத் தக்க வைத்திருக்கிறது கோவை. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள, புதிய தொழில்நுட்பங்களை, நமது தொழிலின் தேவைக்கேற்ப புகுத்தி, அடுத்தடுத்த ஆண்டுகள் எப்படி இருக்கும் என்ற இலக்கோடு, ஸ்மார்ட் மேனுபாக்சரிங் முறைக்கு மாறுவது காலத்தின் கட்டாயம். அரசின் திட்டங்கள், சந்தையின் போக்கு, நவீன தொழில்நுட்பங்கள் என, தொழில்முனைவோர் தினம்தோறும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார், கொடிசியா தலைவர் கார்த்திகேயன்.

இதுதொடர்பாக அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

ஜி.டி.பி.,யில் எம்.எஸ்.எம்.இ., துறையின் பங்களிப்பு 30 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 5.9 கோடி எம்.எஸ்.எம்.இ.,கள் இருந்த நிலையில் தற்போது 6.3 கோடியாக உயர்ந்துள்ளோம். ஆண்டுதோறும் எம்.எஸ்.எம்.இ., துறை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டிய தேவையிருக்கிறது. ஆனால், இதில் சற்று தேக்கம் இருக்கிறது.

லேத்-ல் இருந்து சி.என்.சி.,க்கு மாறியிருக்கிறோம். அடுத்தது என்ன என்று தேட வேண்டும். தொழில்நுட்ப மேம்பாட்டை எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பது முக்கியம். உயர்திறன்கொண்ட தானியங்கி இயந்திரங்கள் வந்துவிட்டன. அதை நமது தொழிலில் எப்படி புகுத்தப்போகிறோம் என்பது தொழில்முனைவோர் யோசிக்க வேண்டும்.

'ஸ்மார்ட் மேனுபாக்சரிங்' என்ற நிலைக்கு அப்கிரேடு செய்ய வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். தரவுகள், தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கப் போகிறது.

எனவே, எம்.எஸ்.எம்., நிறுவனங்கள் வழக்கமான தொழில்நடைமுறையை மட்டும் நம்பியிராமல், நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றை நமது தொழிலுக்குள் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக எளிமையாக நமது தொழிலை விரிவு செய்யலாம். ஆர்க் வெல்டிங்கில் இருந்து லேசர் வெல்டிங் தொழில்நுட்பத்துக்கு மாறியிருக்கிறோம்.

அதிக உற்பத்தித்திறனுக்காக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, தொழில்துறையில் 'வொர்க்கிங் செல்' என்ற பணியகம் இருக்கும். அங்கு ஒரு நபர் நின்று, பல உபகணரங்களை அசெம்பிள் செய்வதற்குப் பதிலாக, ரோபோடிக் ஆர்ம் வைத்து துல்லியமாகவும், துரிதமாகவும் இணைக்கலாம். சில இடங்களில் மனித தலையீடு தேவைப்படும் ரோபோட்களையும் பயன்படுத்தலாம். இது உதாரணம்தான்.

மனிதர்களுக்கு பயிற்சி அளித்து வந்த நாம், மெஷின் லேர்னிங் முறையில் இயந்திரங்களுக்கு கற்பிக்கிறோம். ஏனெனில் மனித உழைப்புக்கு மாற்றாக அங்கு ஆட்டோமேஷன் இடம்பெறுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டலில் சி.ஐ.ஐ., சார்பில் 'புதிய பயணம் 2.0' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இதில், கொடிசியாவும் இணைந்து செயல்படுத்தியது. குறிப்பாக, குறு, சிறு தொழில்களில், பாரம்பரியமாக ஒரு தொழில் நடைமுறைகளைப் பின்பற்றி வருவோம். அந்த வணிகத்தை மேம்படுத்த புதிய பயணத்தில் வழிகாட்டப்படுகிறது. பேலன்ஸ் ஷீட், கொள்முதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை எப்படி செயல்படுத்துகிறீர்கள் என கண்காணித்து, ஒருங்கிணைத்து செயல்படுத்தி, தொழிலை மேம்படுத்துவது என பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு தொழில்முனைவோராக நாம்தான் ஸ்மார்ட் மேனுபாக்சரிங் நோக்கி நகர வேண்டும். ஒட்டுமொத்த உற்பத்தி வினியோகச் சங்கிலியில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தையும், மனித உழைப்பையும் இணைத்து பயன்படுத்துவதுதான் ஸ்மார்ட் மேனுபாக்சரிங்.

செயல்திறன், உற்பத்தித்திறன், நெகிழ்வுத் தன்மை, நீடித்த தன்மை, சந்தைத் தேவைக்கு ஏற்ப மாறுதல், ஜீரோ டிபெக்ட் எனப்படும் குறைவான பிழைகள், உற்பத்திச் செலவைக் குறைத்தல் ஆகியவற்றை ஸ்மார்ட் மேனுபாக்சரிங் சாத்தியப்படுத்தும்.

செயற்கை நுண்ணறிவு, மெஷின்லேர்னிங், இன்டர்நெட் ஆப் திங்ஸ் என ஏராளமான தொழில்நுட்பங்களை தொழிலில் இணைத்து செயல்படுத்த வேண்டும்.

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் கற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டன. தொழில்துறையினர் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் என்ன என்பதை கணித்து செயல்பட வேண்டும்.

ஏற்றுமதி இந்திய ஏற்றுமதியில் எம்.எஸ்.எம்.இ., இன்னும் கூடுதல் கவனம் செலுத்தலாம். அமெரிக்க போன்ற சந்தை வாய்ப்புகள் மறுக்கப்படும்போது, ஆப்பிரிக்கா உட்பட இதுவரை பாராத சந்தைகளைத் தேடலாம்.

ஏற்றுமதி செய்தால், கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, மத்திய அரசு சார்பில் இ.சி.ஜி.சி. அமைப்பு செயல்படுகிறது. கோவையிலும் அலுவலகம் உள்ளது.

கோவையில் இருந்து 140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த நாடுகளில் உள்ள வாங்குவோரின் நம்பகத்தன்மை குறித்த தரவுகளை இந்த அலுவலகம் சரிபார்த்து தருகிறது. மேலும், ஏற்றுமதி மதிப்புக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஏதாவது சூழலில் பணம் வராவிட்டால், காப்பீட்டில் ஈடுகட்டிக் கொள்ளலாம். இப்படி ஒரு திட்டம் இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை.

வெளிநாட்டு சந்தைகளுக்கு தொழிலை விரிவுபடுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. கொடிசியா போன்ற தொழில் அமைப்புகள் 'இன்டர்நேஷனல் கோ ஆபரேஷன்' திட்டத்தில், ஜெர்மனி, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சந்தை வாய்ப்புகளை ஆராய்ந்துள்ளன.

வெளிநாடுகளில் நமது பொருளை விற்பனை செய்ய, அங்கு கண்காட்சியில் ஸ்டால்கள் அமைக்க இத்திட்டத்தில் பயன்பெறலாம். போக்குவரத்து செலவு, தங்குமிடம், உள்ளூர் மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துவதற்கான செலவு என நிதி ஆதரவுகளைப் பெற முடியும். கண்காட்சிகளைச் சென்று பார்வையிடவும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இப்படி, மத்திய, மாநில அரசுகளிடம் உள்ள திட்டங்களைத் தெரிந்து கொண்டு சரியாக பயன்படுத்திக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.

எம்.எஸ்.எம்.இ., துறை இந்திய தொழில்துறையின் முதுகெலும்பு என்கிறோம். காலமாற்றத்துக்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் மேனுபாக்சரிங் என, டெக்னாலஜி அப்டேட் மிக முக்கியம். அதேபோன்று தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பது மிக அவசியம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us