/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பளீச்சென மாறும் நகராட்சி கட்டடம்; அரசியல் கட்சியினர் பிளக்ஸ் அகற்றம்
/
பளீச்சென மாறும் நகராட்சி கட்டடம்; அரசியல் கட்சியினர் பிளக்ஸ் அகற்றம்
பளீச்சென மாறும் நகராட்சி கட்டடம்; அரசியல் கட்சியினர் பிளக்ஸ் அகற்றம்
பளீச்சென மாறும் நகராட்சி கட்டடம்; அரசியல் கட்சியினர் பிளக்ஸ் அகற்றம்
ADDED : மே 14, 2025 11:31 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே,நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் ஒட்டப்பட்டு இருந்த பிளக்ஸ்களை, நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, நகராட்சிக்கு சொந்தமான கட்டடம், தனியார் துணிக்கடைக்கு குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டது. நகராட்சிக்கு வரி செலுத்தாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடைக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அதன்பின், கோர்ட்டில் வழக்கு நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த கட்டடம் போதிய பயன்பாடின்றி வீணாகி வருவதுடன், போஸ்டர் ஒட்டுமிடமாக மாறியது.அரசியல் கட்சியினர் போட்டி போட்டு தங்களது பிளக்ஸ், போஸ்டர்களை கட்டடம் முழுவதும் ஒட்டி வைத்தனர். அனைத்து கட்சியினரும், இலவச விளம்பரம் செய்யும் இடமாக அந்த இடத்தை மாற்றினர்.
இந்த கட்டடத்தில் பிளக்ஸ் வைக்கவோ, போஸ்டர் ஒட்டவோ கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். கட்டடம் மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், நேற்று நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள், அனைத்து பிளக்ஸ் அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது:
நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் எவ்வித அனுமதியும் இன்றி ஒட்டப்பட்டு இருந்த பிளக்ஸ்கள் அகற்றப்பட்டன. அங்கு பிளக்ஸ்களை ஒட்டக்கூடாது என, பிளக்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நகராட்சி கட்டடத்தில் ஒட்டினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் வைக்க கூடாது. உரிய அனுமதி பெற்று இடையூறு இல்லாத இடத்தில் மட்டும் பிளக்ஸ் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி பிளக்ஸ் வைத்தால் அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீதும், பிளக்ஸ் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.