/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வலிகளை மறக்க இசை ஒரு இனிப்பு மருந்து'
/
'வலிகளை மறக்க இசை ஒரு இனிப்பு மருந்து'
ADDED : ஏப் 12, 2025 11:35 PM

'இசைக்கு இதயங்களை வசப்படுத்தும் ஆற்றல் உண்டு. வலிகளை மறந்து வாழ்க்கையை ரசிக்க, இசை ஒரு இனிப்பு மருந்தாக உள்ளது,'' என்கிறார் மெல்லிசை பாடகி மல்லிகா ராஜேந்திரன்.
கோவை வரதராஜபுரம் பகுதியில் வசித்து வரும், இவரும் கணவரும் இணைந்து 'ஜாஸ்மின்' என்ற இசைக்குழுவை நடத்தி வருகின்றனர். குழுவில் மெல்லிசை பாடல்களை பாடி வரும் இவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று, இலவசமாக இசை நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.
அவரிடம் பேசினோம்...
சிறு வயதில் இருந்தே இசை மீது எனக்கு அதிக ஆர்வம். அதனால் முறையாக இசையை கற்றுக்கொண்டேன். எனக்கு இசையில் கிடைக்கும் ஆத்ம திருப்தி, சமூக சேவை செய்வதிலும் கிடைக்கிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கேன்சர் நோயால் பதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய, பல அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளுடன் இணைந்து, சேவை செய்து வருகிறேன்.
பசிதான் இந்த உலகத்தில் மிகப்பெரிய நோய். நம் பசியை நாம் தீர்ப்பது போல், பிறர் பசியை தீர்க்கவும் நாம் உதவ வேண்டும். உழைக்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளிகள், அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கும், எங்களால் முடிந்த அளவு உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கி வருகிறோம்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் சிறப்பாக பாடுகின்றனர். வலிகளை மறந்து, வாழ்க்கையை ரசிக்க இசை ஒரு இனிப்பு மருந்தாக உள்ளது.
அழகாக கூறினார் மல்லிகா.

