/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விஞ்ஞானிகளுக்கு தேசிய விருது
/
கோவை விஞ்ஞானிகளுக்கு தேசிய விருது
ADDED : ஜூலை 17, 2025 10:31 PM

கோவை; கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹரி, புத்திர பிரதாப், முரளி, ரமேஷ் சுந்தர், சிங்காரவேலு ஆகியோருக்கு, வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் புதுமை மற்றும் தொழில்நுட்பம் என்ற பிரிவின் கீழ், 2025ம் ஆண்டுக்கான தேசிய வேளாண் அறிவியல் விருது வழங்கப்பட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக தினத்தை முன்னிட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விருது வழங்கினார்.
'மண் ஈரப்பதங்காட்டி' கருவியை உருவாக்கியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது. இக்கருவியின் முதன்மைக் கண்டுபிடிப்பாளர் ஹரி கூறுகையில், “விவசாயிகள், மண்ணின் ஈரப்பதத்தைக் கண்காணிக்கவும், மகசூல் இழப்பின்றி பாசன நீரை சேமிக்கவும் இக்கருவி உதவுகிறது. தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நடத்திய கள சோதனையில், கரும்பு மகசூல் ஏக்கருக்கு 55.8 டன்கள் கிடைத்துள்ளது.
தற்போது, தனியாருடன் இணைந்து டிஜிட்டல் மண் ஈரப்பத மானி, ஆண்டிராய்டுடன் இணைந்து செயல்படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். பல்வேறு மாநிலங்கள் நீர் பாதுகாப்பு திட்டத்தில் இக்கருவியைப் பயன்படுத்துகின்றன. கத்திரி, மிளகாய், வாழை, நிலக்கடலை, பாக்கு, மாதுளை, தக்காளி போன்ற பயிர்களிலும், தொட்டிச் செடிகளிலும் இக்கருவியைப் பயன்படுத்த முடியும்.
விருது பெற்ற விஞ்ஞானிகளை, கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ் பாராட்டி, வாழ்த்தினார்.