/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் துவக்கம்
/
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் துவக்கம்
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் துவக்கம்
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் துவக்கம்
ADDED : மே 29, 2025 12:18 AM

கோவை; கோவை மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தில், 58வது ஆண்டாக ஆண்களுக்கும், 22வது ஆண்டாக பெண்களுக்கும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது; ஜூன், 1ம் தேதி நிறைவடைகிறது.
ஆண்கள் பிரிவில், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி, சென்னை வருமானவரி அணி, டெல்லி இந்திய விமானப்படை அணி, பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி உட்பட எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில், சென்னை தென்னக ரயில்வே அணி, கேரள மாநிலம் மின் வாரிய அணி, சென்னை வருமானவரி அணி, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி உட்பட எட்டு அணிகள் களம் கண்டுள்ளன.
'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று மாலை நடந்த, ஆண்கள் பிரிவு முதல் போட்டியில், சென்னை வருமான வரி அணியும், கேரள மாநில மின் வாரிய அணியும் (திருவனந்தபுரம்) மோதின.
இதில் சென்னை வருமான வரி அணி, 66-61 என்ற புள்ளி கணக்கில், கேரள அணியை வென்றது. பெண்களுக்கான முதல் போட்டியில், தென் மத்திய ரயில்வே அணியை(செகந்திராபாத்) எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில், தென் மத்திய ரயில்வே அணி, 83-55 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
ஆண்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் சுழற்கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.