/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசியளவில் சிலம்ப போட்டி; கோவை சகோதரிகள் வெற்றி
/
தேசியளவில் சிலம்ப போட்டி; கோவை சகோதரிகள் வெற்றி
ADDED : நவ 17, 2025 01:39 AM

கோவை: குன்னுார் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மற்றும் கோவை வெற்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், 79வது சுதந்திர தினம் மற்றும் கலாம் உலக சாதனைக்கான சிலம்பப் போட்டிகள் நடந்தன.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தேசிய அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இரட்டை கம்பு சுற்றும் போட்டியில், 15 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், கோவை பிருந்தாவன் வித்யாலயா பள்ளியை சேர்ந்த லட்சுமி பூர்ணிமா, தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி பூர்ணிமா தொடர்ந்து இடைநிற்காமல், 79 நிமிடம் சிலம்ப கம்புகளை சுற்றி சாதனை படைத்துள்ளார்.
அதேபோல், ஒற்றை கம்பு சுற்றும் போட்டியில், 10 வயதுக்கு உட்பட்ட மாணவியர் அவரது சகோதரி தன்ஷி பூர்ணிமா, தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.
மாணவி தன்ஷி பூர்ணிமா தொடர்ந்து இடைநிற்காமல், 79 நிமிடம் சிலம்ப கம்புகளை சுற்றி சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ள சகோதரிகள், அடுத்த கட்டமாக சர்வதேச அளவில் நடக்க உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகள் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவில் நடக்க உள்ளன.
மாணவியரின் தந்தை சிவக்குமார் கூறுகையில், ''பாரம்பரிய கலையான சிலம்பத்தை, அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
''இதற்காகவே சிலம்பம் கற்றுக்கொள்ள வைத்தேன். அவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி,'' என்றார்.

