ADDED : பிப் 26, 2026 05:51 AM
தொண்டாமுத்தூர்: தேவராயபுரத்தில், அவினாசிலிங்கம் பல்கலை மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட முகாமில், இளைஞர்களின் நலம் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின், தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவர்கள், 'இளைஞர்கள் மற்றும் கல்வியறிவு' என்ற தலைப்பில், தேவராயபுரம் கிராமத்தில், நாட்டு நலப்பணி திட்ட முகாமிட்டனர்.
இதில், கிராமத்தில் எழுத்தறிவு கணக்கெடுப்பு நடத்தினர். தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், தேவராயபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், கோவில் வளாகங்களில், மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களின் நலம், டிஜிட்டல் கல்வியறிவு குறித்து, விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தி, விழிப்புணர்வு பேரணியும் நடத்தினர். பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
