/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளங்களை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்த எதிர்பார்ப்பு! அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்
/
குளங்களை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்த எதிர்பார்ப்பு! அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்
குளங்களை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்த எதிர்பார்ப்பு! அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்
குளங்களை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்த எதிர்பார்ப்பு! அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்
ADDED : நவ 05, 2025 08:16 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள பாரம்பரிய குளங்களை மீட்டெடுத்து, சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை காலங்களில் வெளியேறும் தண்ணீர், குளம், குட்டைகளில் தேக்கி வைக்கப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது.
கால மாற்றத்தில் குளம், குட்டைகள் குப்பை தேங்குமிடமாகவும், கழிவுநீர் குட்டையாகவும் மாறியுள்ளன. ஒரு சில இடங்களில், ஆக்கிரமிப்புகளால் குட்டைகள் மாயமாகிவிட்டன. இதில், பாரம்பரியமாக உள்ள குளங்களையாவது மீட்டெடுத்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணா குளம் ஜமீன்ஊத்துக்குளி - நல்லுார் ரோட்டில், மொத்தம், 8.53 ெஹக்டேர் பரப்பளவில் கிருஷ்ணா குளம் உள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர், ஜமீன் முத்துார், ஜலத்துார், செல்லாண்டிகவுண்டன் புதுார், ராமபட்டிணம் வழியாக பாய்ந்து, கேரளாவுக்கு செல்கிறது.
மேலும், நீர்வழித்தடத்திலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்து விவசாயம் செழிக்க கைகொடுக்கிறது.
மழை பெய்யாத காலத்தில், பொள்ளாச்சி பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் குளத்தில் தேங்குகிறது. இந்த கழிவுநீரையும் விவசாயிகள் பயன்படுத்தி, சாகுபடி செய்கின்றனர்.
பல கிராமங்களின் நிலத்தடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாகவும் விளங்கும் கிருஷ்ணா குளம், பராமரிப்பின்றி உள்ளது. குளத்தில், தேங்கும் கழிவுநீரில் ஆகாயத் தாமரை செடி வளர்ந்து, சுகாதாரம் பாழ்பட்டுள்ளது.
இந்த குளத்துக்கு, சீசன் மற்றும் கோடை காலங்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில பறவைகள் விசிட் செய்கின்றன. சிறப்பு பெற்ற குளத்தை பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல, குளத்துக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை.
தேவம்பாடிவலசு குளம் பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசு குளம், 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 3,500 அடி நீளம் உள்ள குளத்தில், 6.60 மில்லியன் கனஅடி நீரை தேக்கலாம். இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் வாயிலாக, 220 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
மேலும், மழை காலத்தில் குளம் நிரம்பினால், தேவம்பாடி மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது குளம் பராமரிக்கப்படும் சூழலில் இங்கு சுற்றுலாவை மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இக்குளத்தில் படகு இல்லம், பறவைகள் வந்து தங்கிச் செல்ல குளத்தின் நடுவே தீவு போன்று அமைத்து மரங்கள் வளர்த்து பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், சப் - கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கோதவாடி குளம் கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி குளம், 312 ஏக்கர் பரப்பளவில், இரண்டு மதகுகளுடன் உள்ளது. மழை காலத்தில் வரும் நீர், பி.ஏ.பி. திட்டத்தில் வரும் உபரிநீரை கொண்டு அவ்வப்போது குளம் நிரப்பப்பட்டது.
பல கிராமங்களின் நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள இந்த குளத்தை பராமரிக்கவும், நிரந்தரமாக நீர் வரத்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கு படகு இல்லம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

