/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனவு இல்ல கட்டுமானத்தில் 'இயற்கை'
/
கனவு இல்ல கட்டுமானத்தில் 'இயற்கை'
ADDED : டிச 06, 2025 06:29 AM

இ யற்கையின் அறிவை நேரடியாக கட்டடத் தொழிலில் பயன்படுத்துவதே, 'பயோமிமெடிக்' பொருட்கள் என்று அழைக்கப்படுகிறது.
'பயோ' என்பது உயிர்; 'மிமெடிக்' என்பது பின்பற்றுவது. எளிய மொழியில் சொல்ல வேண்டுமானால், இயற்கையில் இருக்கும் சிறந்த வடிவங்களையும், செ யல்பாடுகளையும் பார்த்து அதே மாதிரி கட்டடப் பொருட்களை உருவாக்குவதே, பயோமிமெடிக் பொருட்கள்.
கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்க(கொஜினா) செயற்குழு உறுப்பினர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது:
தேனீ கூட்டத்தை பின்பற்றி, 'லைட் வெயிட்' கூரை மற்றும் சுவர்கள் கட்டப்படுகின்றன. சிலந்திப்பட்டு என்பது நெகிழ்வானதும், வலிமையானதும்; இதைப் பார்த்து பாதுகாப்பு கயிறுகள், கட்டுமான நுால்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவ்வாறு, பலவிதமான இயற்கை கட்டுமான முறை உள்ளன. 'செல்ப் ஹீலிங் கான்கிரீட்' என்பது சிறிய பிளவுகள் வந்தாலும் தானே குணமாகும். மைக்ரோ பாக்டீரியாக்கள் சுண்ணாம்பு உருவாக்கி சுவரின் விரிசலை மூடும். இதனால் பராமரிப்பு செலவு குறையும், கட்டட ஆயுள் அதிகரிக்கும்.
'பயோமிமெடிக்' பொருட்களானது, வலுவான கட்டடத்தை உருவாக்கும். நிலநடுக்கம், காற்று, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும். பராமரிப்பு செலவை குறைக்கும். எடை குறைவானதால் கட்டுமான வேகம் அதிகரிக்கும். சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும்.
இந்த வகை வீடுகள் பாதுகாப்பானது. சுற்றுச்சூழலுக்கு நட்பு, நீண்ட ஆயுள், பராமரிப்பு செலவு குறைவானது, இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள வலிமையானது என, பல நன்மைகள் உள்ளன. பயோமிமெடிக் பொருட்கள் நம்ம கனவு இல்லத்தை அறிவார்ந்ததும், வலுவானதும், பாதுகாப்பானதுமாக மாற்றும்.
இயற்கை நமக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுத்தருகிறது. அதிலிருந்து கற்றுக் கொண்டு, நவீன கட்டட தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், நமது வீடுகள் மேலும் பாதுகாப்பானதும், நீடித்தும் இருக்கும். சூழலுக்கும் நட்பு பாராட்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

