ADDED : அக் 02, 2025 12:22 AM

சூலுார்; சூலுார் வட்டார கோவில்கள், வீடுகளில், கடந்த, 22 ம்தேதி நவராத்திரி கொலு பூஜை துவங்கியது. சூலுார், சோமனூர், கருமத்தம்பட்டி, வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில், ஒன்பது, ஏழு, ஐந்து என, கொலு படிகள் அமைத்து, பல்வேறு வகையான பொம்மைகளை வைத்து வழிபாடுகள் நடத்தினர். வினோபா நகர் சிவக்குமார் வீட்டில், கொலு பூஜை பாரம்பரிய முறைப்படி பயபக்தியுடன் நடந்தது. தினமும், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
இதேபோல், காடாம்பாடி ராஜலிங்கம் நகரில் உள்ள, ஸ்ரீ சாந்த சிவ காளியம்மன் கோவிலில், நவராத்திரியை ஒட்டி, கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் பலர் வழிபாட்டில் பங்கேற்றனர்.
இதேபோல், சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. இருகூர் செல்வ விநாயகர் கோவிலில் துர்க்காஷ்டமி விழா நடந்தது. காமாட்சி புரி ஆதீனம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். விஸ்வ இந்து பரிஷத் தர்ம பிரசார மாநில பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தியாகராஜன், செந்தில்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.