/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
/
கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
UPDATED : ஜன 09, 2024 02:01 AM
ADDED : ஜன 09, 2024 12:50 AM

கோவை;கோவை கிராமப்புறங்களில் பாம்புக்கடியால் பாதிக்கப்படுபவர்களை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் உயிரிழந்து விடுகின்றனர். ஆகவே, கிராமப்புற மருத்துவமனைகளில் பாம்புக்கடி சிகிச்சைக்கென 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தனி வார்டு துவங்க வேண்டுமென, கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., ஷர்மிளா உள்ளிட்டோர், மனுக்களை பெற்றனர்.
பட்டாவுக்கு எண்
தேவராயபுரம் ஊராட்சி தலைவர் சுந்தரி கொடுத்த மனுவில், 'தேவராயபுரம் கிராமத்தில், 100 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. பலமுறை முறையிட்டும் இன்னும் க.ச. எண் மற்றும் காலை எண் குறிப்பிட்டுத் தரவில்லை. அதனால், அந்த பட்டாக்களை வைத்து வீடு கட்ட முடியவில்லை; வீட்டுக்கடன் பெற முடியவில்லை. உடனடியாக, க.ச., எண் மற்றும் காலை எண் போட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
மகள் இறப்பில் மர்மம்
தீத்திபாளையத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்த மனுவில், 'டிராக்டர் டிரைவராக பணிபுரிகிறேன். எனது இளைய மகள், காளம்பாளையத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்தாள். கடந்த, 1ம் தேதி வேலைக்குச் சென்றவள் வீடு திரும்பவில்லை. செல்லப்ப கவுண்டனுார் ஊர் கவுண்டர் தோட்டத்துக்கு அருகே, எனது மகள் படுகாயத்துடன் கிடந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். எனது மகள் கடத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் இருக்கிறது. உரிய விசாரணை நடத்த வேண்டும்' என கூறியுள்ளார்.
மூதாட்டி மயக்கம்!
கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட ராமராஜபுரம் வெள்ளியங்கிரி மனைவி பழனியம்மாள்,81, கணவர் இல்லாத நிலையில், முதியோர் உதவித் தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். பொதுமக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மக்கள் குறைதீர்ப்பு முகாமில், மொத்தம், 486 மனுக்கள் பெறப்பட்டன. மின்சாரம் தாக்கி உயிரிழந்த, கிருஷ்ணராயபுரம் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் என்பவரின் வாரிசுதாரருக்கு, ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை, சாலை விபத்தில் உயிரிழந்த, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தமிழ்மணி, சித்ரா ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரத்தை, கலெக்டர் வழங்கினார்.
பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு
ஒரு தாய் மக்கள் கட்சி மக்கள் எழுச்சி பேரவை பொது செயலாளர் ராஜ்கிருஷ்ணா கொடுத்த மனுவில், 'கோவை மாவட்டத்தில் தினமும் ஏதேனும் ஒரு பகுதியில் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு பலர் வருகின்றனர். சிகிச்சையில் பிழைத்தோர் சிலர்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் பலர்.
பாம்புகள் கடித்தால், ஒரு மணி நேரத்துக்குள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், மலை கிராமத்தில் இருந்து அழைத்து வருவதற்குள், உடல் முழுவதும் விஷம் பரவி உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண, கிராமப்புற மருத்துவமனைகளில், விஷக்கடிக்கு சிகிச்சை அளிக்க, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தனி வார்டு ஏற்படுத்த வேண்டும்' என கூறியுள்ளார்.
கோவையில் பல ஆண்டுகளாக நீடிக்கிறது, பாம்புக்கடி பிரச்னை. கலெக்டர்கள் பலர் வந்தார்கள்; போனார்கள். இப்பிரச்னைக்கு தற்போதைய கலெக்டராவது தீர்வு காண வேண்டும்.